;
Athirady Tamil News

முகாமையாளர் உள்பட மூவருக்கு விளக்கமறியல்!!

0

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மற்றும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி இருவருமே இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் ஜூலை 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-24) என்பவரே உயிரிழந்தார்.

ஊடக பயிலுநர் நண்பருடன் எரிபொருள் நிரப்ப குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் சென்றுள்ளார். அப்போது இடையில் புகுந்து வந்தவர்கள் எரிபொருள் நிரப்ப முற்பட்ட போது ஊடக நண்பர் காணொளி பதிவு செய்துள்ளார். காணொளி பதிவை தடுக்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஊடக பயிலுநரின் கையை முறுக்கியுள்ளார்.

அதன்போது நியாயம் கேட்க முற்பட்ட இளைஞனை எரிபொருள் நிலையத்தில் உள்ளவர்கள் தலைக்கவசத்தினால் தாக்கியுள்ளனர். அதனால் இளைஞனுக்கு வாய், மூக்கு வழியாக குருதி ஓடியுள்ளது.

அங்கிருந்து வீடு சென்ற இளைஞன் மறுநாள் மதியம் நெஞ்சுவலி மற்றும் உடல் சோர்வு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் இரண்டு நாள்களின் பின் அவர் சிகிச்சை பயனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

இளைஞனின் சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உள்ள தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது எரிபொருள் நிரப்பு நிலைய சிசிரிவி பதிவு காணப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மீது கொலை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிஸார் பி அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில. சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்த மன்று ஜூலை 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணி ஊடாக சரண்டைந்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் விசாரணைகளின் பின் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

முகாமையாளர் மீதும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டன.

அதனால் முகாமையாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிவான், அவரையும் வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.