நிலமோசடி வழக்கு – சஞ்சய் ராவத் நாளை ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில எம்.பி.யும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. நில மோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. இச்சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.