;
Athirady Tamil News

குழந்தை திருமணம், வரதட்சணை போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள்- குடியரசுத் தலைவர் கருத்து..!!

0

உத்திரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணா குடிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பெண்கள் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு கடவுள் வசிப்பார் என்றும் சொல்வது உண்டு. நமது கலாச்சாரத்தில் பெண்கள் தேவதைகளாக போற்றப்படுகின்றனர். ஆனால், நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் பல்வேறு சமூக தீமைகள் இருந்து வருகின்றன. குழந்தை திருமணம், சதி, வரதட்சணை, விதவை வாழ்க்கை போன்ற சமூக தீமைகள் நமது கலாச்சாரம் மீது படிந்த கறைகள். ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்த பிறகு, அந்தபெண்ணின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாய போக்கும், அவருக்கு எதிரானதாக மாறிவிடும். கணவனை இழந்த விதவை பெண்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை தடுத்து நிறுத்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்ந்த மகான்களும், சமூக சீர்திருத்த வாதிகளும், இதுபோன்ற தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கடினமான வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாக சாகர் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் இத்தகைய முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்ற போதிலும், இதில் இன்னும் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கிருஷ்ணா குடில் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கு பதிலாக, மறுமணம், பொருளாதார சுதந்திரம், குடும்ப சொத்தில் சம பங்கு மற்றும் ஆதரவற்ற பெண்களின் சமூக மற்றும் தார்மீக உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.