ஹிருணிகா கைதுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம்!!!
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்களையும் ரொஹான் ஜெயவிக்கிரம உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைகள் ஊடாக மக்களின் குரலுக்கு முகம் கொடுப்பதில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளதாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக முன்வருவார்கள் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் வெறுப்புணர்வையும் இதன்மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுவருவது உலக நாடுகளுக்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்நிலை நாகரிகமான ஜனநாயக நாடுகளிடமிருந்து எம்மை தூரத்துக்கு அழைத்து செல்லும் அதேவேளை, தற்பொழுது முகம் கொடுத்துவரும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையலாம்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அதேவேளை, நாட்டு மக்கள் முகம்கொடுத்துவரும் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் மேலும் அமைதி காக்க முடியாது என்பதையும் அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.
மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வுகளை வழங்காத காரணத்தால், மக்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த உரிமைமீது நாட்டின் சட்டத்தையோ அரசாங்கத்தின் அடக்கு முறைகளையோ செலுத்துவதற்கு நினைத்தால் ஆட்சியாளர்களுக்கும் நாட்டுக்கும் அது நன்மை பகுக்காது. இவ்வாறான சூழ்நிலையை நாம் விரும்புவது இல்லை.
மக்கள் தரப்பிலிருந்து வரும் செய்தியை சரியாக செவிமடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கும் அரச அதிகாரிகளுக்கும் வலியுறுத்த விரும்புகிறோம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்களின் அழுத்தத்தை குறைத்து மதிப்பிட்டு, அடக்குமுறைகளை கையாண்டு நாட்டிடை மேலும் பாதாளத்தில் தள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.