அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு- 15000 யாத்ரீகர்கள் மீட்பு..!!
அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. சிக்கித் தவித்த 15 ஆயிரம் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு பஞ்சதர்னியின் கீழ் தள முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. காயமடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமர்நாத் குகைக் கோயில் அருகே மலை பகுதியில் மீட்பு குழுக்கள், ரோந்து படைகள், மோப்ப நாய்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வான்வழி மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கியது. ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஆறு யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் மீட்புப் பணிகளுக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களையும் அனுப்பியுள்ளது” என்றார். டெல்லியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் செய்தித் தொடர்பாளர், “16 உடல்கள் பால்டால் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.