நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்..!!
டெல்லியில் நேற்று மை ஹோம் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இளைஞர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் உள்ள நாடு இந்தியா. இது நம் நாட்டிற்குக் கிடைத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் உறுதிப்பாடு மற்றும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தே உள்ளது. நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகவும் பழமையானது. பண்டைக் காலத்திலிருந்தே, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.