இயற்கை விவசாயம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றியை பெறும்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய முறை குறித்த மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பணிகள் வருங்காலத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் பெரும் மாற்றங்களுக்கு அடிப்படையாகத் திகழும். நாட்டின், வளர்ச்சி அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வின் அடிப்படையிலானது. இந்த உணர்வு, புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழி நடத்துகிறது. ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முக்கியப் பங்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்றுள்ள வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழ்கிறது. கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது எளிதான காரியமல்ல என்று கூறுபவர்களுக்கு நாடு அளிக்கும் பதில், டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் அசாதாரண வெற்றிதான். மாற்றத்திற்கு வழிகாட்ட முடியும் என்பதை நமது கிராமங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இயற்கை விவசாயம் வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இந்த இயக்கத்தில் ஈடுபாடு உடையவர்கள், பெரும் பலனை அடைவார்கள். நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை நமது விவசாய முறை தான். இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு. எனவே, நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால், விவசாயமும் முன்னேறி, அதன் மூலம் நாடும் முன்னேறும்.நீங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நீங்கள் பூமித் தாய்க்கு சேவையாற்றலாம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம். பண்டைக்கால அறிவாற்றலை தற்காலத் தேவைகளுக்கேற்ப விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது பற்றி வல்லுநர்கள், தொண்டு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம். ரசாயணக் கலப்பு இல்லாத இயற்கை விளைபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இயற்கை விவசாயமும் பன்மடங்கு அதிகரிக்கும். இயற்கை விளைபொருட்களுக்கு தர சான்று உத்தரவாத முறை செயல்படுத்தப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட இயற்கை விளை பொருட்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்தால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.