குரங்கு அம்மை நோய் பாதிப்பு தீவிரம்- மத்திய குழுவினருடன் கேரள சுகாதாரத்துறையினர் ஆலோசனை..!!
உலகை தற்போது அச்சுறுத்தி வரும் நோய்களில் குரங்கு அம்மை நோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை தீவிர சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சமீபத்தில் கேரளா வந்த ஒருவரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில்அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உடனடியாக தனிமை படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் 2 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். நாட்டிலேயே குரங்கு அம்மை நோய் முதல்பதிவு கேரளாவில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் குரங்கு காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் நிலவும் நிலைமையை மதிப்பிடுவதற்காக வந்த மத்தியக் குழு கேரளா விரைந்தது. மத்திய சுகாதாரத் துறையின் ஆலோசகர் டாக்டர் ரவீந்திரன், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் டாக்டர் சங்கேத் குல்கர்னி, புது தில்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையின் டாக்டர் அனுராதா, தோல் மருத்துவர் அகிலேஷ் தோல் மற்றும் பொது சுகாதார நிபுணர் டாக்டர் ருச்சி ஜெயின் ஆகியோர் மத்திய குழுவில் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கேரள மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், மத்திய குழு தன்னுடனும் சுகாதார அதிகாரிகளுடனும் கலந்துரையாடியது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் நோயாளியை பார்வையிட்டனர். குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான பயிற்சிகள் விரிவான முறையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வேறு யாருக்கும் நோய் இருப்பது கண்டறியப்படவில்லை. அவரது தொடர்புகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன. சுகாதாரத் துறையினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.