;
Athirady Tamil News

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம்- மத்திய நிதி மந்திரி வலியுறுத்தல்..!!

0

சண்டிகரில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) கவுன்சிலின் 47-வது கூட்டத்தில் பிராண்ட் அல்லாத பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி. புதிய வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இந்த வரியால் அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை (தரத்துக்கு ஏற்ப) விலை உயர்ந்தது. கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி மூட்டை (25 கிலோ) ரூ.1,050-க்கு விற்பனை ஆனது. அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்களும், அரிசி வியாபாரிகளும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. பொருந்தும் என பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில்லறை விற்பனையில் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்றும், பாக்கெட்டுகளில் அடைத்து லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி குறிப்பிட்டுள்ளார். லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.