இந்தியாவின் புதிய ஜனாதிபதியாகிறார் திரவுபதி முர்மு..!!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். பரபரப்பான சூழலில் கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்.பி.க்களும், நாடு முழுவதும் 30 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர்.776 எம்.பி.க்கள் உள்பட 4,800-க்கு மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதில் 99 சதவீதத்தினர் ஓட்டு போட்டனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக ஒட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு விமானங்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்த திரவுபதி, மூன்று சுற்றுக்களின் முடிவில் 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை தோற்கடிப்பது உறுதியாகியுள்ளது.. இதன்மூலம் இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட உள்ளார்.