எரிபொருளை பெற்றுக் கொடுக்க கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!!
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை(25) பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கான எரிபொருள் பங்கிட்டு அட்டையை வழங்குவதற்கு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்த விடயத்தில் கரைச்சி கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாகும்.
ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டையை வழங்குகின்ற செயற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”