கீறல் விழும் எதிர்பார்ப்புகள்!! (கட்டுரை)
நாட்டில் மிகப் பெரியதொரு பிரளயம் ஏற்பட்டு, அதன் விளைவாக ஆட்சிக் கட்டமைப்பில் சிறியதொரு மாற்றம் உருவாகியிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பழைய அமைச்சரவை புதிதாக மீண்டும் பதவியேற்று இருக்கின்றது.
உண்மையில், முறைமைசார் மாற்றத்தையே மக்கள் எதிர்பார்த்தனர். முழுமையான ஆட்சி மாற்றம், அதனது ஆரம்பப் புள்ளியாக இருக்கும் என்ற நிலைப்பாடும் இருந்தது. ஆயினும், நேரடி ஆட்சி பீடத்தில் இருந்து ராஜபக்ஷர்கள் அகற்றப்பட்ட போதும், மொட்டு அணியே அதிகாரத்துக்கு வந்திருக்கின்றது.
ஆகவே, இந்த மாற்றமானது, ஆர்ப்பாட்டக்காரர்களையும் கணிசமான மக்களையும் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. ஒருவேளை டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக வந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். ஆனால், இதைவிட வேறு தெரிவும் இப்போதைக்கு இல்லை.
ரணில் ஜனாதிபதியானதன் மூலம், நாட்டில் பாரிய கட்டமைப்புசார் மாற்றமோ, முறைமைசார் மாற்றமோ ஏற்படப் போவதில்லை. ஆனால், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை, ஒரளவுக்கேனும் முடிவுக்கு கொண்டுவரும் ஆற்றல்மிக்கவர் என்ற வகையில், இப்போது மிகச் சிறந்த ஒப்பீட்டுத் தெரிவு, ரணில் விக்கிரமசிங்க என்பதை மறுக்க முடியாது. எனவே, இத்தருணத்தில் புதிய ஜனாதிபதியை நாடு சரிவரப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது, நல்லதோர் அரசியல், ஜனநாயக கலாசாரத்தையும் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையில் ஒரு கீறல் விழுந்துள்ளது,
ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால ஆட்சி பற்றிய பதிவுகள், ராஜபக்ஷ ஆட்சி நாட்டில் எற்படுத்திய பாரிய சீரழிவுகள் என்பவற்றுடன், ரணில் பதவியேற்று 24 மணித்தியாலத்துக்குள் ‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது படைப்பலம் பிரயோகிக்கப்பட்ட விதம் ஆகியவையே, நம்பிக்கையில் ஒரு கீறல் விழக் காரணமாகும்.
இலங்கையில் அரசியல் தலைவர்கள் அதிகாரக் கதிரையில் கால்நீட்டி இருந்த எல்லாக் காலங்களிலும் பிரித்தாளுகை, அரசியல் குழப்பங்கள், இனவாத நெருக்கடி, ஒடுக்குமுறை, கலவரங்கள், சதித்திட்ட நகர்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக, நிறைவேற்று அதிகாரத்தை அறிமுகப்படுத்தியவரும் ரணில் விக்கிரமசிங்கவின் தாய் மாமனுமான ஜே.ஆர்.ஜயவர்தனவுக்குப் பிறகு, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலங்கள் பெரும்பாலும் முழுமை பெறாமலே முடிவுக்கு வரவேண்டிய சூழல் காணப்பட்டது. அதுபோல, 2022க்கு முன்னதாக, ஐந்து தடவைகள் ரணில் பிரதமராகப் பதவி வகித்த போதும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதும், மக்கள் வாக்குகளால் அவரது ஜனாதிபதி கனவு பலிக்கவில்லை.
அதுமட்டுமன்றி, 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் ரணில், மக்களால் தோற்கடிக்கப்பட்டார். ஆயினும், அரசியலில் ஓரமாக நின்று கொண்டு, தனக்கான நேரம் வரும்வரை காத்திருந்தார்.
மறுபுறத்தில், மஹிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பியிருந்த சாம்ராஜ்யம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதற்குப் பிறகு சரியத் தொடங்கியது. இனவாதத்தையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் மூலதனமாக்கியது மட்டுமன்றி, முஸ்லிம்களை வஞ்சித்த கோட்டாபய ஆட்சி, அவர்கள் தீட்டிய ஆயுதத்தாலேயே வெட்டி வீழ்த்தப்பட்டது.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு, மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுச்சி கொண்டனர். மக்கள் அலை, ஜனாதிபதி, பிரதமரின் படுக்கையறை வரை கரைபுரண்டோடியது. அதில் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்.
இதனால், கோட்டாபய நாட்டை விட்டு ஓடிச் சென்றதுடன், ஏனைய ராஜபக்ஷர்கள் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்ற நிலைக்கு வந்தனர். இது அவர்கள் செய்த அநியாயங்களுக்கான இறைதண்டனை (கர்மா) என்றும் கருதப்படுகின்றது.
இந்தப் பின்புலத்திலேயே, ரணில் விக்கிரமசிங்க காத்திருந்த காலம் கைகூடியது. தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில், இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அதாவது, 69 இலட்சம் மக்களிள் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கோட்டாபய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓட, எம்.பியாகக் கூட நேரடியாக மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படாத ஒருவர், 134 எம்.பிக்கள் அளித்த வாக்குகளின் ஊடாக, ஜனாதிபதியாக முடி சூடியுள்ளார்.
இலங்கையில் நடக்கின்ற எல்லா விதமான நகர்வுகளுக்குப் பின்னாலும் வெளிநாடுகளின் செல்வாக்குகள் இருக்கின்றன. அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கும் காய்நகர்த்தல்களும் இதில் முக்கியமானவை. என்னதான் அவர்கள் மாறி மாறி மறுப்பறிக்கைகளை வெளியிட்டாலும், இலங்கையில் நடப்பவற்றுக்குப் பின்னால் இருக்கின்ற உலக அரசியலை, மக்கள் இப்போதெல்லாம் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.
முன்னதாக, நாட்டை யாரும் பொறுப்பெடுக்கத் தயங்கிய நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். “நீங்கள் பொறுப்பெடுங்கள்; நாங்கள் மிகுதியை பார்த்துக் கொள்கின்றோம்” என்ற நம்பிக்கை அவருக்கு வெளித்தரப்பால் ஊட்டப்பட்டிருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட அனுமானம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ராஜபக்ஷர்களின் பதவி விலகல், கோட்டாபயவின் வெளியேற்றம் என்பவற்றுக்குப் பின்னால், மக்கள் எழுச்சி மட்டுமன்றி, குறிப்பிட்ட வெளிநாடுகளும் ஏதோ ஒரு வகிபாகத்தை வகித்திருப்பதாகவே கருத வேண்டும்.
சரித்திரக் கதைகளில் கூட கேட்டிராத பொருளாதார, வாழ்வியல் நெருக்கடிக்குள் இலங்கை மக்கள் சிக்குண்டு துவண்டு போயிருக்கின்றனர். குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த அநியாயங்களின் சாபம்தான் இது என்று, சிங்கள மக்களே கூறுமளவுக்கு, நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
இவ்வாறான ஒரு கட்டத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவியேற்று உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு உறவுகள் பற்றி, சிங்கள பெருந்தேசியம் ஒருவித அச்சம் கொண்டிருந்தாலும், அதைச் சாதகமாக பயன்படுத்தி, அவர் நெருக்கடியை குறைப்பார் என்றே பெருமளவான மக்கள் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மறுநிமிடமே, “பேதங்களை மறந்து தன்னோடு இணைந்து பணியாற்றவும் நாட்டின் நெருக்கடியை தீர்க்கவும் முன்வர வேண்டும்” என்று சகல தரப்பினருக்கும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். இது ஒரு நல்ல சமிக்ஞையாகும்.
ஆனால் பதவியேற்று சில மணிநேரங்களில், ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருந்த போராட்டக் காரர்கள் மீது, படையினர் தாக்குதல் நடத்தியமை நல்ல சமிக்கையல்ல. ஜனாதிபதி வாசஸ்தலம், அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளடங்கலாக அரச சொத்துகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றியது, மக்கள் எழுச்சியின் ஓர் அங்கமாகும்.ஆனால், அவற்றின் புனிதத்தை கெடுத்து, சொத்துகளை சேதப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதை ஏற்க முடியாது.
இந்நிலையில், அமைச்சர்களின் பதவியேற்புக்காகவும் வழக்கமான அரச பணிக்காகவும், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை அகற்ற வேண்டுமாயின், இதைவிட ஒழுங்காக, நாசுக்கான முறையில், வன்முறைகளின்றி செய்திருக்கலாம்.
அதைவிடுத்து, அமைதியான போராட்டக்காரர்கள் மீது படையினரை ஏவி விட்டதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதும் மிக மோசமான செயற்பாடுகளாகும். ரணில் விக்கிரமசிங்க பற்றி, இதுவரை காலமும் இருந்த நல்ல ‘இமேஜ்’இல் கீறல் விழுவதற்கு இது காரணமாக அமைந்தது. “நாம் ரணிலுக்கு வாக்களிக்காததன் நியாயம், இப்போது விளங்கியிருக்கும்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியது.
ரணில் அனுபவசாலி; திறமையானவர், கனதியானவர் என்பதற்குமப்பால் அவர் ஜனநாயகவாதி; இனவாதமற்றவர், மக்களை நேசிப்பவர் என்ற பார்வை இதுவரை இருந்தது. இதனால் ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் கட்டியெழுப்பப்பட்டு நல்லதோர் அரசியல் கலாசாரத்துக்கு அவர் வித்திடலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது.
ஆனால், ஜனாதிபதி செயலக சம்பவம், மக்களை முகம்சுழிக்க வைக்குமளவுக்கு முதற் கோணலாக அமைந்து விட்டது. அதுமட்டுமன்றி, அவரால் நியமிக்கபட்ட அமைச்சரவையைப் பார்த்த போது, ரணிலின் ஆளுகையானது, மொட்டு ஆட்சியின் இரண்டாம் பாகமாவே இருக்கப் போகின்றதா என்ற சந்தேகமும் ஏற்படாமலில்லை.
ரணில் விக்கிரமசிங்க அரசியலில் கைதேர்ந்தவர் என்றாலும், மக்களின் கடந்தகால மனப் பதிவுகளில் அவர் வெற்றிகரமான ஒருவராக பதிவு செய்யப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கடந்தகாலத்தில் தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
ராஜபக்ஷர்ளின் எகத்தாளமான, அதிகார தோரணையிலான ஆட்சிதான் இவ்வளவு சீரழிவுக்கும் காரணம் என்ற பாடத்தை கற்க வேண்டும். அதற்கெதிரான மக்கள் அலைதான், ரணிலை ஜனாதிபதியாகவும் தினேஸ் குணவர்தனவை பிரதமராகவும் அமர்த்தியுள்ளது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
முதற்கோணல் முற்றிலும் கோணலாகி விடாதவாறு, மக்களின் நம்பிக்கையை வெல்வதன் ஊடாக, மிக விரைவாக நெருக்கடியைத் தீர்க்க வேண்டும். ‘சட்டியில் இருந்து, அடுப்புக்குள் விழுந்த நிலை’யை மக்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது.