கேரளாவில் யூ டியூப் பார்த்து ஒயின் தயாரித்த 12 வயது சிறுவன்..!!
சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல தகவல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும், சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதில் யூ டியூப் பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்பவர்கள் மத்தியில் மதுபானம் தயாரித்து நண்பனை மயக்கமடையச் செய்துள்ளான் 12 வயது சிறுவன் ஒருவன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவனே இதில் ஈடுபட்டு உள்ளான். தான் தயாரித்த மதுவை நேற்று முன்தினம் பள்ளிக்கு கொண்டு சென்று நண்பனுக்கு கொடுத்துள்ளான். அதனை பருகிய மாணவன் வாந்தி எடுத்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தாங்களாகவே வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோர் வாங்கிய திராட்சையை பயன்படுத்தி மது தயாரித்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான். யூ டியூப் வீடியோவில் காட்டியபடி திராட்சை பழ சாறை பாட்டிலில் ஊற்றி நிலத்தடியில் புதைத்ததாகவும் சில நாட்கள் கழித்து அதனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று நண்பனுக்கு கொடுத்ததாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான். இருப்பினும் ஸ்பிரிட் அல்லது வேறு எதையும் மூலப்பொருளாக பயன்படுத்தவில்லை என்று சிறுவன் கூறினான். இதனை தொடர்ந்து பாட்டிலில் இருந்து மது மாதிரிகளை சேகரித்து, கோர்ட்டு அனுமதியுடன் அதனை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மதுவில் ஸ்பிரிட் அல்லது வேறு ஏதேனும் மதுபானம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஏதாவது இருப்பது கண்டறியப்பட்டால், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், சிறுவனின் பெற்றோர் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கு அவனது செயலால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.