நில மோசடி வழக்கு- சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது..!!
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி நில மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி சஞ்சய் ராவத் மும்பை அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மோசடி குறித்து 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக 20-ந் தேதி மற்றும் 27-ந்தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்துக்கு 2 முறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்கு பிறகு ஆஜராக விலக்கு அளிக்கும்படி சஞ்சய் ராவத் தரப்பில் அமலாக்கதுறைக்கு தெரிவிக்கப்பட்டது. மும்பை புறநகர் பகுதியான பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு இன்று காலை 7 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடியாக சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணபரிவர்த்தனை மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சய்ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் என் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் இறக்கும் வரை சிவசேனாவில் இருந்து விலக மாட்டேன். நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.