ஸ்மிருதி இரானி ஜனாதிபதியை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு – மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவமதித்து விட்டதாக கடந்த வாரம் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ஜனாதிபதியை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது ஜனாதிபதியின் பெயருக்கு முன்னால் கவுரவ வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கடிதத்தில், ‘நன்றாக இந்தி பேச தெரியாத நான், வாய்தவறி கூறிய ஒரு வார்த்தைக்காக தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளானேன். அது குறித்து ஜனாதிபதியிடம் நான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ஆனால் ஸ்மிருதி இரானியோ ஜனாதிபதி பற்றி கூறும்போது, ‘மரியாதைக்குரிய ஜனாதிபதி’ அல்லது ‘மேடம்’ அல்லது ‘திருமதி’ என்ற கவுரவ வார்த்தைகளை பயன்படுத்தாமல் வெறும் ‘திரவுதி முர்மு’ என அவையில் தொடர்ந்து கத்திக்கொண்டு இருந்தார். இது ஜனாதிபதி பதவியின் தரத்தை தாழ்த்துவதாக உள்ளது. எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.