குறுகிய காலத்தில் காஷ்மீரில் 170 அடி பாலம் அமைத்து ராணுவம் சாதனை..!!
காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோவிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் ஒன்று சமீபத்தில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு வருடாந்திர புனித யாத்திரை தொடங்க வேண்டியிருந்ததால் அங்கு குறுகிய காலத்தில் பாலம் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே இதற்காக ராணுவத்தின் உதவி நாடப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஷ்ட்ரீய ரைபிள் படை என்ஜினீயர் குழு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறுவனத்தின் உதவியுடன் கம்பி பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இரவு-பகலாக நடந்த பணிகளின் பலனாக குறுகிய காலத்திலேயே பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக மச்சயில் மாதா கோவிலுக்கான புனித யாத்திரையும் தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறாமல் மீண்டும் யாத்திரை தொடங்கியுள்ளதால், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். குறுகிய காலத்தில் 170 அடி பாலம் அமைத்து புனித யாத்திரைக்கு உதவிய ராணுவத்தினரை காஷ்மீர் அரசு நிர்வாகம் பாராட்டி உள்ளது.