தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 150 பெண்கள் திடீர் மயக்கம்..!!
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான துணி நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காலை வேலைக்கு வந்து தொழிலாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றனர். மாலை 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இரவு பணிக்கு வந்து வேலை செய்து கொண்டு இருந்தனர். இரவு 7 மணி அளவில் தொழிற்ச்சாலையில் இருந்த சிலிண்டரில் இருந்து விஷ வாயு கசிந்து தொழிற்சாலை முழுவதும் பரவியது. விஷ வாயு பரவுவதை உணர்ந்த ஒரு சில பெண் பணியாளர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடினார். மேலும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 150 பெண்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசவாயு கசிவை அடைத்து மயக்கம் அடைந்த பெண்களை தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்டு அச்சுதாபுரத்தில் உள்ள என்.டி.ஆர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மீதமுள்ள பெண்கள் 2 தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு மூச்சு திணறலை கட்டுப்படுத்துவதற்காக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. குறைந்த அளவு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு இருந்ததால் மற்ற பெண்களுக்கு ஆக்சிஜன் செலுத்த முடியவில்லை. இதனால் விஷவாயு தாக்கிய பெண்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து உதவி கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மேலும் ஆக்சிஜன்சிலிண்டர்களை வரவழைத்து பெண் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷவாயு தாக்கிய தொழிற்சாலையில் கடந்த ஜூன் 3-ந் தேதி ஏற்கனவே விஷவாயு தாக்கி அப்பகுதி முழுவதும் பரவியது இதனால் 469 பேர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் விஷவாயு எப்படி கசிந்தது என அரசு ஒரு கமிட்டியை அமைத்து ஆய்வு செய்து வந்த நிலையில் மீண்டும் விஷவாயு தாக்கி 150 பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.