பதாதைகளை ஏந்தினால் பெற்றோல் கிடைக்காது !!
அனைத்து வேறுபாடுகளையும் மறந்து வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், மக்கள் கோரும் சிஸ்டம் சேஞ்ச் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நீண்டக் காலமாக நாட்டு மக்கள் முகங்கொடுத்து வரும் எரிபொருள், காஸ், உர பிரச்சினைக்கு ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களால் தற்போது தீர்வுக் கிடைத்து வருவதாகவும், ஏனையப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு மக்கள் பொறுமையுடன் நியாயமான காலத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
காலியில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், போராட்டங்களுக்காக பதாதைகளை ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய எரிபொருள் இல்லாமல்போவதுடன், இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பதாதைகளை ஏந்துவதால் பிரச்சினை இல்லை. தொழிற்சங்க உரிமைகள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் எமது நாடு வீழ்ந்து கிடக்கிறது. இதுவொரு வங்குரோத்தடைந்த நாடு. இதனைப் புரிந்துக்கொண்டு இந்த அரசாங்கம் சரியானப் பாதையில் பயணிக்க 6 மாதக்காலத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிது காலஅவகாசத்தை வழங்குதன் ஊடாக பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்படும். கடந்த இரு வருடங்களாக காணக்கிடைக்காத இரசாயண உரங்கள் தற்போது கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.