;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றங்களை உடனே கலையுங்கள் : அரசிடம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் வேண்டுகோள்.!!

0

நாட்டில் பல சபைகள் நகர சபைகளாகவும், மாநகர சபைகளாகவும் தரமுயர்த்தப்பட்டும் சாய்ந்தமருது நகர சபை விடயம் மட்டும் அநாதையாக்கப்பட்டுள்ளது. தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவுடன் சேர்ந்து சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிய கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாக உள்ள தோடம்பழக் குழுவினருக்கு தக்க பாடம் புகட்ட சாய்ந்தமருது மக்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் இந்த சபைகளை கலைப்பதன் மூலம் அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகக் குறைவாகவும் தேசிய காங்கிரஸுக்கு அதிகளவிலும் வாக்களித்த சாய்ந்தமருது மக்களை தே.கா தலைவர் அதாவுல்லா எம்.பி உச்சளவில் ஏமாற்றிவிட்டதாகவும் யஹியாகான் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

மு. கா தலைமை சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. சாய்ந்தமருது மக்களின் கனவை நனவாக்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாகவுள்ளது. தே.கா தலைவர் சாய்ந்தமருது மக்கள் வழங்கிய ஆணைக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும். இது விடயத்தில் அவர் ஏதாவது முயற்சிகள் செய்வாராயின் அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். அதை விடுத்து சபை பெற்றுத்தருவேன் என்று கூறி சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற இன்னும் முயற்சிக்கக் கூடாது.

சாய்ந்தமருதை சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் அடிக்கடி எங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை நகர சபை விடயமாக பேசி வருகின்றேன். அதேவேளை நாடு பூராகவுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.