சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சம்மாந்துறை வி.கழகத்தை வீழ்த்தி வென்றது !
சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அணி. சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ அணிக்கு 11 பேர் 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கட் போட்டியில் இந்த வெற்றி பதிவானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 18 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றனர் இதில் கே. முஸ்னி அஹமட் 30 பந்துகளில் 70 ஓட்டங்களையும், பர்ஹத் பராஸ் 40 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சம்மாந்துறை விளையாட்டுக் கழக வீரர் அப்ரத் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 183 எனும் வெற்றியிலக்கை நோக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களையும் எதிர்கொண்டு எட்டு விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்று 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சார்பில் கூடிய ஓட்டங்களை சர்பின் (26), றிகாஸ் (25) ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த போட்டியின் சிறந்த வீரருக்கான விருது கே. முஸ்னி அஹமட்டுக்கும் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய பர்ஹத் பராஸுக்கு பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.