அமைச்சு பதவிகளை ஏற்கேமாட்டோம் !!
சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையுமானால் அதற்கு ஆதரவு தெரிவிப்போமே தவிர, அமைச்சுப்பதவிகளை ஏற்க மாட்டோம்
என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம் பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களின் நலன் கருதியும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் கருதியும் நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமையுமானால் அதற்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கனவே நாங்கள் அறிவித்திருக்கின்றோம்.
சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமாகவே நாட்டு மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் ஆறு மாதத்திற்கு மோசமாக காணப்படுமென ஜனாதிபதியும் அறிவித்துள்ளார்.
மேலும் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவுக்கு சீரடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதனால் மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்தியும் செய்ய முடியாது.
கௌரவத்துக்காக அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்யாவிட்டால் மக்கள் என்னை தூக்கி எறிந்து விடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் தேர்தலுக்குப் பிறகு அமைச்சுப் பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதே பொருத்தமென நினைக்கின்றேன் என்றார்.