;
Athirady Tamil News

அனுமதிப் பத்திரம் இன்றி பெற்றோலை விற்பனை; வழக்கில் இருந்து விடுதலை!!

0

அனுமதிப் பத்திரம் இன்றி பெற்றோலை விற்பனை செய்ததாகவும் மற்றும் மண்ணெண்ணை,டீசல் பெற்றோல் என்பனவற்றை தனது உடமையில் வைத்திருந்ததாகவும் ஏழாலை மயிலங்காடு எனும் இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுபதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 1660 லீற்றர் மண்ணெண்ணை,306 லீற்றர் பெற்றோல்,210 லிற்றர் டீசல்,என்பன சான்றுப் பொருட்களாக வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்டன அத்துடன் குறித்த நபர் ரூபாய் 500 க்கு 750 மி லிற்றர் பெற்றோலை பொலிசாருக்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்து 500 ரூபாய் தாள் ஒன்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் அவருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் கொன்ரபில் ஒருவரும் விசாரணையின் போது சாட்சியமளித்தனர்

குற்றம் சாட்டப்பட்ட நபர் பெற்றோல் விற்பனை எதனையும் தான் மேற்கொள்ளவில்லை என்று தனது சாட்சியத்தில் தெரிவித்ததோடு விவசாய நடவடிக்கைகளுக்காக குறித்த எரிபொருட்களை தான் சேகரித்து வைத்திருந்தாக மேலும் குறிப்பிட்டார்

அத்துடன் விவசாயத்திணைக்களத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் தனது இரண்டு மோட்டார் சைக்கிள்கள்,முச்சக்கரவண்டி,
லான்ட்மாஸ்டர் என்பவற்றின் பதிவுச் சான்றிதல்களையும் சமர்பித்தார்

குறித்த நபர் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படவேண்டிய பாவனையாளராகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் எரிபொருட்களை அவர் தன்வசம் வைத்திருப்பது குற்றமாகாது என்றும்

அவரின் சார்பில் சட்டத்தரணி திருமதி ஏ கீர்த்தனாவின் அனுசரணையுடன் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி என் ஸ்ரீகாந்தா வாதாடினார் மேலும் குற்றச்சாட்டுகளில் உரிய சட்டப்பிரிவுகள் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

அந்நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றின் முன்னால் உள்ள சகல விடயங்களையும் பரிசீலித்துப்பார்க்கையில் இரண்டு குற்றச்சாட்டுக்களிளிருந்தும் குறித்த நபரை விடுதலை செய்து தீர்ப்பளிக்க வேண்டியுள்ளதாக மல்லாகம் நீதிவான் திருமதி காயத்திரி சைலவன் தெரிவித்துக் கட்டளை வழங்கியதோடு, கைப்பற்றப்பட்ட எரிபொருட்களை குறித்த நபரிடம் மீளக் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.