நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியம்!!
நிலவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப முன்னேற்றம் நிகழ வேண்டும் எனவும், அது இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியால் நாட்டில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்துவதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தி, நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நேரத்தில், நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் நிலமை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது 80களின் பிற்பகுதி மற்றும் 90களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை ஆரம்பித்ததால் எனவும், ஆனால் அதன் பின்னர் உருவான தலைவர்கள் குறுகிய அரசியல் நோக்கத்துடன் அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனவும், ஏதோ ஒரு வகையில் ஏற்றுமதி சார்ந்த ஆடைத் தொழில் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாம் எதிர்நோக்கும் பொருளாதார மந்தநிலையிலிருந்து இலகுவாக விடுபட்டிருக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டம் பெல்மடுல்ல தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று (14) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெல்மடுல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளரான சட்டத்தரணி சமித ஆடிகல இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததோடு ஏராளமான பிரதேச மக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.