யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் – இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? (படங்கள்)
சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் – 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.
இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதலே இந்தியா நிவாரண பொருட்கள், பொருளாதார தொகுப்புதவி உள்பட பல்வேறு உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. ஆனால், அத்தகைய உதவிகளை சீனா இலங்கைக்கு வழங்காதிருந்தது.
இந்த நிலையில், பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவி வழங்காவிட்டாலும், இலங்கை மீது தொடர்ந்து தமது நன்மதிப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே யுவான் வாங் 5 கப்பலை சீனா அனுப்பி இருக்கிறது என்று பிபிசி தமிழிடம் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதன் கூறினார்.
சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் – 5 கப்பலானது, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு திட்டமிட்டிருந்தது.
கடந்த மாத நடுப்பகுதியில் சீனாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய இந்த கப்பல், வழியில் எந்தவொரு துறைமுகத்திலும் நங்கூரமிடாமல், நேரடியாகவே இலங்கையை நோக்கி பயணித்தது.
இலங்கை திடீர் கோரிக்கை
ஆனால், கப்பல் பாதி வழியில் வந்து கொண்டிருந்த தருணத்தில், இலங்கைக்குள் இந்த கப்பல் அனுமதிப்பதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. இதையடுத்து, சீன கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த நேரத்தில் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை கடல் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறைப்படி அனுமதி கிடைக்கப் பெறும் வரை, இலங்கையிலிருந்து சுமார் 600 கடல் மைல் தூரத்திலேயே இந்த கப்பல் மிகவும் குறைந்த வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில், சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. இந்தப் பின்னணியில், இலங்கை அரசாங்கம் சீனாவின் கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்க இணக்கம் தெரிவித்தது.
இதன்படி, ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதி வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், உணவு உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
பரிசு கொடுத்த இந்தியா
இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட்டப்படும் வரை, இலங்கை கடல் பகுதிக்குள் அந்த கப்பல் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. அதேவேளை, சுதந்திர தினத்தன்று, இந்தியாவால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டது.
யுவான் வாங் 5 கப்பல் வருவதற்கு முந்தைய தினத்தில், இவ்வாறு சமுத்திர கண்காணிப்பு விமானமொன்று இலங்கைக்கு பரிசளிக்கப்பட்டமையும், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இவ்வாறான சர்ச்சைகள் தொடர்பில் பிபிசி தமிழ், மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதனிடம் வினவியது. இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கப்பல் தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அவர் விவரித்தார்.
”இலங்கை ராஜதந்திரத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை இது. உண்மையில் ஜீ.எல்.பீரிஸ் தான் சீன கப்பல் வருகைக்கு அனுமதி கொடுத்துக் கையெழுத்திட்டார். 9ஆம் தேதி ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு போகிறார். ஜீ.எல்.பீரிஸ் 12ஆம் தேதி இதற்கு கையெழுத்திட்டிருக்கிறார். பிறகு 14ஆம் தேதி ஜனாதிபதி பதவி விலகுகிறார். இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் தான் அனுமதிக்கான கையெழுத்து இடப்பட்டது.
கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்தது. நாங்கள் எங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, கப்பலை அனுப்பி விட்டோம். கட்டாயம் வந்து தான் ஆக வேண்டும் என சீனா கூறியது. வேறு வழியில்லாமல் தான் இவர்களுக்கு இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் இந்தியா ஒரு அறிக்கை விட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கு நாம் அழுத்தம் கொடுக்கவில்லை என அவர்கள் கூறினார்கள். இந்து – பசுபிக் உடன்படிக்கையின் படி, சர்வதேச நாடொன்று எங்களின் நாட்டிற்குள் வர விரும்பினால், அதற்கு நாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
தென்னிந்தியாவுக்கு பாதிப்பா?
பாதுகாப்பு ரீதியாக பார்த்தால், இந்த உளவு பார்க்கும் கப்பல் ஒன்று. சுமார் 750 கிலோமீற்றர் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அது நேரடியாக எங்களுக்கான பாதிப்பை விடவும், இந்தியாவிற்கு வந்து, அதுவும் தென்னிந்தியாவிற்கு பெரிய பாதிப்பு. அவர்கள் கண்காணிக்கும் தன்மை இருக்கும். இந்த நெருக்கடியை இந்தியாவுடன் இலங்கை எவ்வாறு கையாள போகின்றது என்பதில் தான் இருக்கின்றது.
என்னை பொறுத்த வரை இந்தியாவை ஓரளவிற்கு இலங்கை திருப்திப்படுத்தியுள்ளது. அதனாலேயே, இலங்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என இந்தியா அறிவித்ததற்கு காரணம் அது தான்” என ஏ.பி.மதன் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே ஒரு முறுகல் நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலைமையில் இந்த கப்பல் இலங்கைக்கு வந்ததை அடுத்து, இந்து சமுத்திரத்திற்குள் ஒரு அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதா?
”இல்லை. அப்படி நடக்காது. ஏனென்றால், இந்தியா தன்னை ஒரு வல்லரசாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றது. வல்லரசாக இருக்கும் போது, தான் இறங்கி சென்று, அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு இந்தியா விரும்பாது. இல்லையென்றால், தாங்கள் வல்லரசு இல்லை என்பதை ஒத்துக்கொண்ட மாதிரி ஆகிவி;டும். அப்படியொரு நிலைக்கு இந்தியா போக விரும்பாது.” என அவர் கூறுகின்றார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நேற்று. சுதந்திர தினத்தை கொண்டாடியதற்கு பின்னரே, சீன கப்பலுக்கு இலங்கைக்குள் வருகைத் தர அனுமதி வழங்கப்படுகின்றது. அதேபோன்று, இந்தியாவின் சமுத்திர கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டதன் பின்னரே, இந்த கப்பல் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
”இல்லை. இந்த கப்பலுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நானும் உதவுகின்றேன் என இந்தியா இதனை வழங்கியுள்ளது. இரண்டு விடயங்கள் உள்ளன. சீனா இலங்கைக்கு கடன் வழங்குகின்றது. இந்திய உதவி செய்கின்றது. இது தான் இரண்டு வித்தியாசங்கள். உதவியை பெற்றுக்கொள்வதா? கடனை பெற்றுக்கொள்வதா? என்பதில் தான் இருக்கின்றது. இந்தியா கடனுக்கு அப்பால், உதவியை தான் செய்துக்கொண்டிருக்கின்றார்கள். சீனா அப்படி இல்லை. சீனா கடனை கொடுத்து, இலங்கை கஷ்டத்தில் சிக்குவதற்கு பார்க்கின்றது. அந்த நிலைமை தான் இதில் இருக்கின்றது”
சீனாவுடனான ராஜீய உறவு எப்படி இருக்கும்?
இந்த கப்பல் வருகைத் தருவதற்கு முன்னதாகவே, இந்தியாவினால் வழங்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. இது ஏதேனும் தொடர்புகள் உள்ளதா?
”சில வேளை இருக்கும். அதுவும் உளவு பார்க்கும் விமானம் தான். இந்தியா தமது விமானத்தை நேரடியாக இலங்கைக்கு அனுப்பி, கண்காணிப்பதை விட, இலங்கைக்கு விமானத்தை வழங்கி, இலங்கை விமானப்படை அதை பயன்படுத்தினால், இவர்களுக்கு ஒன்றும் கூற முடியாது தானே. விமானத்தை பறக்க வைத்து கண்காணிக்க போவதில்லை. ராடார் மூலம் பறக்காமலே கண்காணிக்க முடியும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த கப்பல் விவகாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தியா, சீனா இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் இனிவரும் காலங்களில் ராஜதந்திர உறவு எவ்வாறு இருக்கும்?
”இந்த பிரச்சினை ஓய்வும் பிரச்சினை இல்லை. இந்து சமுத்திரத்தில் வல்லாதிக்க நாடு எது என்ற போட்டி, காலகாலமாக தொடரும். அது இருக்க தான் போகின்றது. இந்த கப்பல் வந்தாலும் இருக்கும். இந்த கப்பல் வாராவிட்டாலும் இருக்கும். சீனா தாய்வானை விட்டு கொடுத்த தயாராக இல்லை. அதேமாதிரி இலங்கையை விட்டு கொடுப்பதற்கு இந்தியா தயார் இல்லை. இந்தியா எந்தவொரு காலத்திலும், நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழீழ விடுதலை போராட்டத்தில் இந்தியா உதவிகளை வழங்கி இருந்தாலும் கூட, நாடு பிரிந்து வரும் என்ற நிலை வரும் போது, இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு தான் ஆதரவு வழங்கியது.
அப்படி பிரிந்து போவதற்கு இந்தியா விடவில்லை. இப்படியாகவே இந்தியாவின் ஆதிக்கம் இருக்கின்றது. சீனாவை பொறுத்த வரை, கடனை கொடுத்து, சிக்க வைக்கின்றனர். வட்டிக்கு கடனை கொடுப்பதை போல. அப்படி ஒரு பிரச்சினை இருக்கின்றது. இப்படியான நிலைமையை இங்குள்ள ஆட்சியாளர்கள் சரியாக கையாள தெரிந்துக்கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ சீனாவிடம் கடனை பெற்றுக்கொண்டுள்ளனர். உடனே இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து, சீனாவை பகைத்துக்கொள்ள இயலாது. அதுக்காக சீனாவிடம் மீண்டும் கடனை வாங்கிக் கொண்டு, இந்தியாவை பகைத்துக்கொள்ளவும் முடியாது. இது ராஜதந்திர சிக்கல்.” என மூத்த ஊடகவியலாளர் ஏ.பி.மதன் தெரிவிக்கின்றார்.
இந்த கப்பல் இந்த நேரத்தில் இலங்கைக்குள் வருவதற்கான நோக்கம் என்ன?
”நான் வந்து காட்டுகின்றேன் என்பதை காண்பிக்கவாக இருக்கும். கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் சீனா இலங்கைக்கு எதுவும் செய்யவில்லை. இந்தியா உடனடியாக உதவி செய்தது. அதற்காக தான், உண்மை விடவும் நான் ஆதிக்கம் உள்ளவன் என்பதை சீனாவிற்கு காட்ட வேண்டும். இலங்கையில் எனக்கும் அதிகாரம் இருக்கின்றது. எனக்கும் உரிமை இருக்கு என்பதை சீனா காட்ட வேண்டும். அதற்கு ஒரு துரும்பாக பயன்படுத்திக் கொண்டது தான் இந்த விவகாரம். இது யுத்த கப்பல் கிடையாது. இது உளவு கப்பல். இதுவொரு கண்காணிப்பு தான். யுத்த கப்பல் வந்திருக்கும் பட்சத்தில், அது வேறு விதத்தில் சென்றிருக்கும்” என அவர் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான ஏ.பி.மதன் கூறுகின்றார்.
சீன கப்பல் வரும் முன்பே இலங்கைக்கு இந்தியா வழங்கிய கண்காணிப்பு விமானம்!! (படங்கள்)
சீனா உளவு கப்பல் விவகாரம்: இந்தியாவின் எதிர்ப்பால் அனுமதி ரத்து?
அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?
இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)
கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)
அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!
ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!
நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!
இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)
கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!
போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!
இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)
கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)
பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!
செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!