தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் முப்பெரும் திறப்புவிழா! (படங்கள்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்புவிழா நிகழ்வு 17.08.2022 ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக கலை கலாசார பீடத்தில் கட்டிமுடிக்கப்பட்ட மாணவர் செயற்பாட்டு மைய்யம் உபவேந்தரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. குறித்த AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடம் 120 மில்லியன் ரூபாய் நிதி உதவியினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சகல வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டு மைய்யத்தில் இளம்கலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் தொழில் வழிகாட்டல் அலகு, சமூக நல்லிணக்க மைய்யம், மாணவர் பிரத்தியேக நூலகம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர் மைய்யத்திற்காக சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கலை கலாசார பீடத்தின் சகல கற்கைத்துறைகளுக்கும் தனியான நூலகத்தினை அமைப்பதற்கும் AHEAD நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன்படி சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் கலை கலாசார பீடத்தின் 08 துறைகளிலும் பிரத்தியேக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நூல்கள், தளபாடங்கள் போன்றனவும் திட்டத்தித்தினூடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலங்களும் இன்றைய தினம் உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டு குறித்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல், கணிணி அறிவு என்பவற்றினை மேம்படுத்துவதற்காக சுமார் 18.6 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதில் விரிவுரை மண்டபங்களை டிஜிடல் மயப்படுத்துவதற்காக 8.6 மில்லியன் செலவிடப்பட்டு, விரிவுரை மண்டபங்களில் ஸ்மார்ட்போட், எல்.ஈ.டீ. திரைகள் என்பனவும் பொருத்தப்பட்டு விரிவுரை மண்டபங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. கலை கலாசார பீடத்தின் இணைய வழிமூலமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக தனியான தரவுத்தள சேமிப்பகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
கலை கலாசார பீடத்தினால் வழங்கப்படுகின்ற பட்டப்பின்படிப்புக் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான பட்டப்பின்படிப்பு கற்கை அலகும் உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டது. இவ்வலகினால் முதுமாணி, முதுதத்துவமாணி, கலாநிதி கற்கைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதிப்பங்களிப்புடன் கலை கலாசார பீடத்தின் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்திசெய்யப்பட்டுள்ளன. இந்நிதியுதவியின் கீழ் நிறைவுசெய்யப்பட்ட திட்டங்களும் உபவேந்தரினால் திறந்துவைக்கப்பட்டு பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
இம்முப்பெரும் திறப்பு விழா நிகழ்வில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பொறியியலாளர் என். டீ. சிராஜுதீன் பதிவாளர் எச். அப்துல் சத்தார், பிரதிப்பதிவாளர் எம். ஐ.நௌபர், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி ஏ.சபீனா எம்.ஜீ. ஹசன், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ. எல்.மஜீத், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதில் நிதியாளர் வன்னியாராச்சி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட உதவிப் பதிவாளர்கள், பல்கலைக்கழக உலக வங்கி நிதித்திட்டங்களின் பொறுப்பாளர் பேராசிரியர் எம்.ஏ.எம். றமீஸ், பல்கலைக்கழக பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஷீல், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.டீ. ஏ. அஸ்ஹர், கலை கலாசார பீடத்தின் நிகழ்த்திட்ட ஒருங்கிணைப்பாளர் பௌசுல் கரீமா, குறித்த செயற்றிட்டங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர்கள், பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.