அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம் !!
பதவி விலகக் கோரி பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தெரிய வருகின்றது.
அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால், கிரீன் கார்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது கொழும்பில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் மேலதிக ஆவணங்களை சமர்ப்பித்து அதனை முன்னெடுத்து செல்வதாக கூறப்படுகின்றது.
தற்போது தனது மனைவியுடன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டலில் இருக்கும்
முன்னாள் ஜனாதிபதி, நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் தங்குவதற்கான தனது ஆரம்ப திட்டத்தை இரத்து செய்துவிட்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.