ஜெனீவாவுக்கு முன்னரான குழப்பம் !! (கட்டுரை)
தமிழர் தேசிய தரப்பில் எப்போதும் குழப்பம். இதில், புதிதான குழப்பம் ஏதுமில்லை. ஆனால், குழப்பம் குறைய வழி என்ன என்று கேட்டால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பரஸ்பர விட்டுக்கொடுப்பும் உட்கட்சி ஜனநாயகமும் பேணப்படவேண்டும் என்பதாகவே பதில்அமைகிறது.
தாய்க்கட்சி, தலைமைக்கட்சி, சின்னத்தின் கட்சி என்கின்ற ஆதிக்கத்தனங்களும், ஆயுதக்குழுக்கள், ஆயுத இயக்கங்கள், ஜனநாயக நடைமுறைக் கட்சி எனப் பல கருத்து நிலைப்பாடுகளும் இந்தக் குழப்பங்களுக்குக் காரணங்களாக அமைகின்றன.
தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளை மறந்து, ஒற்றுமையாக தமிழ் மக்களுக்காக போராட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தங்களது கட்சி மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கும்; இதை மறுப்பதற்கு இல்லை.
இருந்தாலும், தற்காலத்தில் தமிழ் மக்களின் சூழ்நிலை கருதி, அவைகளை விடுத்து மக்களுக்காகவே கட்சி; கட்சிக்காக மக்கள் இல்லை என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஒற்றுமையாக செயற்படுவோம் என்கின்ற கோசம் நீண்ட காலமாகவே ஒலிக்கின்ற கோசமாக இருந்தாலும், அது தமிழர்களிடம் எந்த அளவுக்கு செயற்பட்டிருக்கிறது?
முள்ளி வாய்க்கால் அவலத்தின் பின்னர், தமிழர்களின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலை போலாகி விட்டது. அன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பலமேனும் இருந்தது. ஆனால், இப்பொழுது வெறுமனே எங்களது ஜனநாயக உரிமை என்ற கோசத்துடன் முயற்சிக்கிறோம்.
அதாவது, செப்டெம்பர் 11 நியூயோர்க் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சர்வதேச கருத்து நிலை மாற்றம் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் அமெரிக்க சார்பு மேற்குலக மாற்றங்கள், இந்தியப் பிரதமர் ராஜீவ் மரணத்தின் பின்னராக இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டு மனநிலை மாற்றம், தமிழர்களின் போராட்டத்தை ‘விடுதலைப் போராட்டம்’ என்ற கருத்து நிலையிலிருந்து ‘பயங்கரவாத செயற்பாடு’ என்ற அர்த்தத்துக்கு இட்டுச் சென்றது.
சர்வதேச ரீதியாக ஏற்பட்ட இம் மாற்றங்களை இலங்கை அரசு வெற்றிகரமாக தனக்குச் சாதகமாக்கி மேற்கு, கிழக்கு உட்பட வல்லரசு நாடுகளின் ஆயுத உதவி, ஆலோசனைகளின் ஊடாக, சர்வதேச ஆதரவுடன் கண்மூடித்தனமாக தாக்கியழித்து 2009, மே 19ஆம் திகதி முள்ளிவாய்காலோடு தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்து விட்டது. இதில் இலங்கை அரசு பெருமையும் கொண்டது.
இலங்கை வந்த சர்வதேச சாடுகளின் அரச உயர்மட்டத்தினரிடம், “புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க உதவுங்கள்; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபின்னர் 13 மட்டுமா, 13 பிளஸ் இல்லை 13பிளஸ் பிளஸ் கொடுப்போம், ஏன் ஈழம் தவிர்ந்த எல்லாம் கொடுப்போம்” என்று கூறிய அரசாங்கம், வெறுமனே பொருளாதாரப் பிரச்சினையாக்கி, எலும்புத்துண்டு கொடுத்தால் போதும் என்ற நிலையாக்கிவிட்டது.
அதன் தொடர்ச்சியான வேலைகளை, இலங்கை அரசாங்கம் விட்டுவிடவில்லை. செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலும் தமக்குச் சாதகமான நிலையையே, அரசு உருவாக்கிக் கொள்ளும்.
தமிழர் தரப்பின் குத்தல் குடையல், பிய்த்தல், பிடுங்கல்கள் என்பன பேரினவாதத்துக்குச் சாதக தன்மையையே உருவாக்குகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையை எதிர்கொண்டு, அனுசரணையையும் செய்து சமாளித்துக் கொண்டது.
அதன் பின்னர் வந்த அரசாங்கம், அனுசரணையிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைப்பாடு வரை சென்றது. இப்போது மற்றுமோர் அரசாங்கம் அதற்குள் வெளிக்காட்டப்படும் சர்வகட்சி அரசாங்க என்கிற முயற்சி. இவ்வாறு காலத்தை இழுத்துக் கொண்டே, இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழர்களின் காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது.
காலங்கடத்தல் மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்காமல் நிகழ்த்தப்படும் உரிமை மறுப்பை, என்ன பெயர் சொல்லி அழைக்கமுடியும்.
முள்ளி வாய்காலின் பின்பு தான் அமெரிக்கா உட்பட மேற்குலகமும் அதன் அமைப்புகளும் இலங்கையின் பேரினவாத கோரமுகத்தை அறிந்து கொண்டன. யுத்தம் நடந்த போது, உதவிய நாடுகள் இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடு என்பவற்றை மதித்ததாக கூறிய இலங்கை அரசு, யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையின் ஆட்சியைக் கவிழ்ப்பதக்கும் இறைமை, ஒருமைப்பாடு என்பவற்றுக்கு எதிராகவும் செயற்படுவதாக ஒப்பாரிவைக்கின்றமையையே காண்கிறோம். இந்த வினோத அரசியல் நிலையே, இன்றைய யதார்த்தம் கொஞ்சமேனும் புதிய ஜனாதிபதியின் அழுத்தங்களால் இம்முறை மாறலாம்.
ஓவ்வொரு தடவையிலும் ஜெனீவா கூட்டத்தொடர், மனித உரிமைகள் பேரவை அமர்வு போன்றவைகள் தொடங்குகின்ற வேளைகளில், தமிழர் பக்கமிருந்து ஓர் எழுச்சி உருவாவதும் அக்கூட்டங்கள் நிறைவடைந்ததும் சலிப்பு மனோநிலையுடன் அலுத்துப் போவதும் வழமையானதே.
ஐக்கிய நாடுகள் சபையில், ஒரு நாடு இல்லாத ஈழத் தமிழர்கள், தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கே முடியாது என்ற கருத்துகள் இப்போதுதான் பரவி வருகின்ற நிலையில், நமக்காக குரல் கொடுப்பதற்காக உலகின் ஏனைய நாடுகளைத் திரட்டும் பணியை ஏற்கெனவே தொடங்கி இருந்தாலும் அது தொடரவேண்டும். அதற்காக, தமிழர் தரப்பின் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்கவேண்டும்.
இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், ஆட்சி மாற்றங்கள், அரசியல் குழப்பங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கிறது. அவ்வேளைகளிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் காலம் தாழ்த்தலைக் கேட்கின்றது. அதே நேரத்தில், இப்போதைய நிலையில், கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடியால் உருவான அரசில் குழப்பங்கள், அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலை, பிரச்சினைகளை ஜெனீவாவில் காரணமாகக் காட்ட இருக்கிறது. இருந்தாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில், முன்வைப்பை நேரடியாக மேற்கொள்வதற்கே முடியாத நிலையே காணப்படுகிறது.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவன செய்யுங்கள் என்று இந்திய அரசாங்கத்துக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பட்டபாடு பெரும் பாடாக இருந்தது. அதற்கு என்ன நடந்ததென்று இதுவரையும் தெரியாமலேயே இருக்கிறது.
அதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு தமிழ்த் தேசிய தரப்பாக ஒருமித்த கடிதத்தை அனுப்புவதற்கு முயற்சிக்கப்பட்ட வேளை, பெரும் பிரச்சினைகளே ஏற்பட்டிருந்தன. அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு நிலைப்பாட்டையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேறு ஒரு விதமான நிலைப்பாட்டுடனும் கடிதங்களை அனுப்பின. இன்னும் பல கடிதங்களும் சென்றன.
அதன் பின்னர் தங்கள் தங்களது அரசியல் குழப்பங்களுக்குள் சங்கமமாகிவிட்டன. தனிப்பட்ட அரசியல் கால அட்டவணைகளை தேர்தல்களுக்காக மாத்திரம் வைத்துக் கொண்டு, தமிழர்களின் தேசிய நலனுக்காக ஒரு திட்டவட்டமான திடமான கால அட்டவணையை ஏற்படுத்துவற்கு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் இருக்கின்ற கட்சிகள் முயலவேண்டும். இதனை யார் முன்நின்று நடத்துவது என்பது முக்கியமற்றதாக இருத்தலேசிறப்பு. காழ்ப்புணர்ச்சிகள் விட்டொதுக்கப்படவேண்டும். இதில் சர்வதேச நாடுகளில் இயங்குகின்ற அமைப்புகளும் இணைக்கப்படவேண்டும்.
கால அட்டவணை என்பதும் நிறுத்தப்படாத நோக்கத்துக்கான செயற்பாடும் முக்கியமானதாகும். அதனை விடுத்து குழப்பங்களும் கோபங்களும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வை இன்னும் எத்தனை தசாப்தங்களுக்கு இழுத்துச் செல்லப்போகிறது என்ற அச்சத்தை கட்சிகள் மனங்கொள்ளவேண்டும். அதற்காக தேவையற்ற பல விடயங்கள் புறமொதுக்கப்படல் நல்லதே.
இன்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படும் சர்வகட்சி அரசாங்கம், புதிய அரசியலமைப்பு மாற்றம் போன்றவைகளெல்லாம் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு சரியான தீர்வைத் தரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டே முயலுதலும் வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் மங்கள முனசிங்க தலைமையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தீர்வுக்கு ஓர் அடிப்படையாக அமையலாம் என்ற சிந்தனை காணப்பட்டாலும், ஒரளவு வலுவான ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வுப் பொதியும் கூட காணாமலாக்கப்பட்டதே இலங்கையின் வரலாறாகும். சிறுபான்மைக் கட்சிகளைப் புறக்கணித்து, பெரும்பான்மையினத்தில் சிறுபான்மையினர் தொடர்பான ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களைப் புறக்கணித்து, சிங்கள பௌத்தவாதிகளை மட்டும் உள்ளடக்கிய நடவடிக்கைகளுக்கு மாறாக, சர்வதேசத்தை ஏமாற்றவும் காலம் கடத்தவுமான முயற்சியொன்றும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு வெளிவிவகார அமைச்சராக இருக்கின்ற அலி சப்ரியைச் சுட்டலாம். இன்றைய சிறுபான்மை இன அரசியல் நிலைமைகள், எரிகிற வீட்டில் புடுங்கியது இலாபம் என்பதே. இதுவே இன்றைய சிறுபான்மைக் கட்சிகளின் யதார்த்தமும் கூட. இதிலிருந்து மாற்றத்தைக் கண்டு, தமிழ் மக்களுக்கான சுதந்திர வாழ்க்கைக்காக முயல்தல் சிறப்பு.