திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.94 ஆயிரம் மோசடி- 2 வாலிபர்கள் கைது..!!
திருப்பதியில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 டிக்கெட்டுகள், சுப்ரபாத சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் திருப்பதிக்கு வருகின்றனர். இலவச தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை கண்டு எப்படியும் தரிசனம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என எண்ணுகின்றனர். இதனால் அங்குள்ள வேன், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் இவர்களை நாடி தரிசன டிக்கெட் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த மோகன் குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு வந்திருந்தார். அவரிடம் முன்பதிவு செய்த தரிசன டிக்கெட்டுகள் இல்லாததால் அவரிடம் சென்ற சித்தூரை சேர்ந்த ராஜா 6 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் 4 சுப்ரபாத சேவை டிக்கெட் பெற்றுத் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.86,000 பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவானார். இதே போல் பெங்களூரை சேர்ந்த கிரண் தேசால்பாண்டே என்பவரிடம் திருப்பதி பெணுமூரை சேர்ந்த பவன் குமார் ரெட்டி என்பவர் 4 சுப்ரபாத சேவை டிக்கெட் பெற்று தருவதாக கூறி அவரிடமிருந்து 8,000 பெற்றுக் கொண்டு தலைமாறைவானார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவர்களுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் திருமலை 2 டவுன் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து 2 பேரையும் கைது செய்தனர்.