’மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கு விற்கப்படும்’ !!
மத்தள விமான நிலையத்திற்கு முறையாக விமானங்கள் வருகை தராத காரணத்தினால் இப்போதும் விமான நிலையம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எனவே விமான நிலைய காரியாலயத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
மத்தள விமான நிலையம் இப்போதும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்கொண்டுள்ள விமான நிலையமாகும். கொவிட் அச்சுறுத்தல்கள் மற்றும் ஏனைய காரணிகளை கருத்தில் கொண்டு அங்கு விமானங்கள் தரையிறக்கப்படவில்லை. எனினும் அதனையும் வருவாய் ஈட்டித்தரும் விமான நிலையமாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றோம்.
எனவே அங்கும் விமானங்களுக்காக பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொடுத்து வேலைத்திட்டமொன்றை உருவாக்கி, உலகின் சகல நாடுகளுக்கும் அந்த நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும். அது வெற்றியளிக்கும் என நாமும் நம்புகின்றோம்.
நூறு மில்லியன் டொலர் கடன்களை பெற்றே இந்த விமான நிலையத்தை புனரமைத்துள்ளோம் .அந்த கடனையும் செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே மத்தளை விமான நிலையத்தை மீள் புனரமைக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். குறிப்பாக தனியார் மயப்படுத்தப்பட்ட வேண்டும். முழுமையாக விமான நிலையத்தை விற்பதாக அர்த்தப்படாது, அதன் ஒரு பங்கினை விற்போம் என்றார்.