சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் இருந்து மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!
டி.டி.வி.தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதானவர் சுகேஷ் சந்திர சேகர். இதேபோன்று சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் பலவற்றில் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இவற்றில் அவரது மனைவி லீனாவும் சிக்கி இருந்தார். இவர்கள் இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் உயிருக்கு திகார் சிறையில் அச்சுறுத்தல் உள்ளதால், டெல்லிக்கு வெளியே உள்ள சிறைக்கு தங்களை மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை நேற்று நீதிபதி எஸ்.ஆர்.பட் மற்றும் சுதன்சு துலியா அமர்வு விசாரித்தது. சுகேஷ் சந்திரசேகர் சார்பில் மூத்த வக்கீல் ஆர். வசந்தும், டெல்லி போலீஸ் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவும் ஆஜராகி வாதாடினர். விசாரணை முடிவில் சுகேஷ் சந்திரசேகரையும், அவரது மனைவியையும் திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.