;
Athirady Tamil News

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை !

0

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடனான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற முதல் வாரத்தில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைகளை நீக்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இசாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விடுத்திருந்த பணிப்புரைக்கு இணங்க இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலிலையே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்த இந்த கூட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து 06 அமைப்புக்களின் தடையை நீக்குவது தொடர்பில் பல்வேறு விடயங்களை கலந்துரையாடி அதற்கான மேலதிக நடவடிக்கைகளை பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் தடையை நீக்கவுள்ள ஆறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் துரிதகதியில் தடைநீக்க அறிவிப்பை வெளியிட பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்கத்துக்கான நியாயப்பாடுகள் தொடர்பில் விளக்கத்தை முன்வைத்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.