தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)
கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்குள்ள கரவாகுப்பற்று கல்முனைக் கண்டத்திலுற்குள் நுழையும் காட்டுயானைகள் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை 2 மணியளவில் நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மக்கள் குடியிருப்பு நிறைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த குறித்த தனியன் காட்டுயானை ஒன்று அங்குள்ள வீட்டு மதில் மற்றும் வாழை, பலா உட்பட பயனுள்ள மரங்களையும் துவம்சம் செய்துள்ளது.
மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென வீட்டிற்குள் நுழைகின்ற தனியன் காட்டுயானையினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அத்துடன் ஊருக்குள் யானை நுழைந்ததை அறிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்ததுடன் அதனை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக காட்டு யானைகள் சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு ,மருதமுனை, கிராமத்திற்குள நுழைந்து அட்டகாசம் செய்து வருவதினால் இரவு வேளையில் மக்கள் நித்திரையின்றி விழித்திருக்கின்றனர் இதனால் பல்வேறு உடல் உள உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர்.
எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”