பந்துல, பிரசன்ன, விமலுக்கு அழைப்பு!!
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளை (29) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, எம்.பிக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.
குறித்த எம்.பிக்கள் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமைக்கு அமையவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தேவையான அடிப்படை உண்மைகளை, மேற்குறிப்பிட்ட மூவரிடமும் இன்று பதிவு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, மே 9 மற்றும் அதற்குப் பின்னரான வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட பல உள்ளுராட்சி மன்ற தலைவர்களும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.