1.5 மில். டொலர் உதவி வழங்கியது ஜப்பான்!!
இலங்கைக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட உணவு உதவியின், 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலாவது தொகுதியானது, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக, இன்று (29) வழங்கப்பட்டது.
உணவுத் திட்டத்தின் பிரதிநிதியும், வதிவிடப் பணிப்பாளருமான அப்துல் ரஹீம் சித்திக்கீயின் முன்னிலையில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷூகொஷி ஹிதியாகியினால் வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.
அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளடங்கியதாக இந்த உதவியானது, கிராமப்புற, மற்றும் நகர்ப்புறங்களில் சுமார் 15,000 பேருக்கும், 380,000 பாடசாலை மாணவர்களுக்கும் உணவுத் திட்டத்தினால் இது பகிர்ந்தளிக்கப்படும் என்றும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
தேவையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த மனிதநேய உதவியானது நிவாரணத்தை வழங்கும் எனவும், அவர்களது நாளாந்த ஊட்டச்சத்து தேவைகளை எட்டுவதற்கு உதவும் எனவும் நாம் உண்மையாக நம்புகின்றோம் என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷூகொஷி ஹிதியாகி தெரிவித்தார்.
60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் ஏற்கனவே உள்ள அதிகளவு ஊட்டச்சத்தின்மையை மேலும் அதிகரிக்கக் கூடிய உணவின் அளவை குறைத்தல், குறைந்தளவு ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளல் போன்ற எதிர்கொள்ளல் உபாயங்களை நாடுவதாக உலக உணவுத் திட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அவசர உணவு உதவி தேவைப்படும் 1.4 மில்லியன் மக்கள் உள்ளடங்கலாக, உணவு, பணம் அல்லது வவுச்சர் உதவி மற்றும் ஒரு மில்லியன் பாடசாலைக் குழந்தைகள் மற்றும் தற்போதுள்ள தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக ஒரு மில்லியன் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் உள்ளடங்கலாக 3.4 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி வழங்குவதற்கு உணவுத் திட்டம் நிதி மற்றும் ஆதரவைத் திரட்டுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.