ஒருவருடம் ஒன்றுமையுடன் பணிபுரியவும்!!
நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒரு வருட காலத்திற்கு ஒற்றுமையுடன் பணிபுரிந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அதேபோன்று 19வது திருத்தத்தை மீள் அமுல்படுத்துவதற்கும், அதனூடாக ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை மக்கள் பிரதிநிதிகள் இடத்தில் வைக்கின்றோம். அதன் பின் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் பிரஜைகளால் வெளியேற்றிக் கொள்ளலாம். எமது எதிர்காலத்தை கருதி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம் என்றார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கமும், இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுத்து வரும் “சிறந்த நாட்டுக்கான புதிய அரசியல் அமைப்பு” எனும் நிகழ்ச்சி தொடரின் 5ஆவது நிகழ்ச்சி 28 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதேசத்தின் மகா சங்கத்தினர் , கிறிஸ்தவ, இந்து, முஸ்லீம் மதத் தலைவர்கள், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி அமைச்சர் கரு பரணவிதான, தொழிற்சங்க தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த மாநாட்டின் போது சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய உரையாற்றுகையில்,
இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இங்கு வருகை தந்திருக்கும் உங்களை சந்திப்பதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். நாம் அரசியல் பக்கச்சார்பற்ற அமைப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டு, நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அதி வணக்கத்துக்குரிய மாதுளுவாவே சோபித்த பதரரினால் ஜனநாயகத்தையும் , அடிப்படை மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எனும் தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
நாட்டின் இன, மத, சமூக பிரச்சனைகளுக்காக நாம் அச்சமின்றி குரல் எழுப்புவோம். ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும், எந்த ஒரு தலைவராக இருந்தாலும், அவர்களினால் மேற்கொள்ளப்படும் சரியானவற்றை பாராட்டுவதற்கும், தவறான முடிவுகளை விமர்சிப்பதற்கும் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன் வருவோம். எமது அமைப்பு பல உலக நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்ச்சியான தொடர்பை பேணி வருகின்றது. குறிப்பாக வெளிநாட்டில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த அறிஞர்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் நாம் பெற்றுக் கொள்கின்றோம். தற்போது இவ்விடயங்கள் தொடர்பில் 96 சூம் கலந்துரையாடல்களை நடத்தி இருக்கின்றோம். அந்த கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகள் தொடர்பில் பல முக்கிய வெளியீடுகளை வெளியிட்டு இருக்கின்றோம். அவற்றை எமது முகநூல் பக்கத்தில் அல்லது http://www.sadharana.org எனும் இணையதளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
பொருளாதாரம், கல்வி விவசாயம், கடற்தொழில், தேர்தல் முறை, புதிய அரசியலமைப்பும் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான குறைந்தபட்ச வேலை திட்ட பரிந்துரை போன்ற முக்கிய விடயங்களுக்கு பொது இழக்கப்பாட்டினை நாம் உருவாக்கி உள்ளோம்.
இலங்கை வரலாற்றில் இதுவரை எதிர்கொள்ளாத நெருக்கடிகளுக்கு நாம் தற்போது முகம் கொடுத்து உள்ளோம். இலங்கை வங்குரத்து அடைந்த நாடாக சர்வதேசத்தினர் கருதுகின்றனர். பொருளாதாரம் முற்று முழுதாக நலிவடைந்துள்ளது. மின்சார தடை, அதிக அளவிலான வாழ்க்கைச் செலவு, போஷாக்கு குறைபாடு போன்றவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்றார்.
இந்தப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு நாட்டினுள் பொது இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். இதுவரை பொது இனக்கப்பாடு ஏற்படாமல் இருப்பது துர்பாக்கியமான நிலையாகவே கருத வேண்டும். எரிபொருள் வரிசைகள், எரிவாயு பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள், போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றுக்கு அரசாங்கம் தீர்வளித்து இருப்பதை பாராட்டுகின்றோம்.
தேசிய அமைப்பு என்ற வகையில் அரசியல் பேதமின்றி அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறு இடம் பெற்றால் ஒட்டுமொத்த பாராளுமன்றத்திற்கும் மக்கள் திறப்பிலிருந்து குற்றச்சாற்றுகள் சுமத்தப்படமாட்டாது. அப்போது அரசியல் தலைவர்களின் பூரண ஒத்துழைப்புடனும், மக்களின் ஆசிர்வாதத்துடனும் நாட்டை கட்டி எழுப்பலாம்.
24 மணித்தியால தடை இல்லாமின்சார விநியோகமும், தொடர்ச்சியான எரிபொருள் விநியோகமும் இருக்கும் பட்சத்தில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை சுமூக நிலையடையும், அதேபோன்று தொழில் மற்றும் ஏற்றுமதிகளும், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும்.
அதனைத் தொடர்ந்து விவசாயத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு தேவையான விதைகள், பசலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நியாய விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கினால் பெரும்போகத்தில் அதிக விளைச்சலை எதிர்பார்க்கலாம் என்று விவசாயத்துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள்.
அண்மை காலங்களாக தொழிற்சங்க மற்றும் மாணவர் சங்க தலைவர்களை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்தல் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி வருவது தொடர்பில் நாம் எமது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றோம்.
ஆகையால் உடனடியாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒரு வருட காலத்திற்கு ஒற்றுமையுடன் பணிபுரிந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோன்று 19வது திருத்தத்தை மீள் அமுல்படுத்துவதற்கும், அதனூடாக ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை மக்கள் பிரதிநிதிகள் இடத்தில் வைக்கின்றோம். அதன் பின் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் பிரஜைகளால் வெளியேற்றிக் கொள்ளலாம். எமது எதிர்காலத்தை கருதி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.