;
Athirady Tamil News

பழைய மகாபலிபுரம் சாலையில் 93 மரங்கள் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டன..!!

0

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, டைடல் பார்க் சந்திப்பில் 4 திசைகளையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. அதன் அருகே 1500 அடி தூரத்தில் இந்திரா நகர் சந்திப்பில் ‘யு’ வடிவ மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் கட்டுமான பணிக்காக அங்கு நின்ற மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மரங்கள் அனைத்தும் 10 முதல் 20 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஆகும். எனவே மரங்களை வெட்டுவதற்கு பதிலாக வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு பராமரிக்க சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது. இந்த மேம்பாலம் கட்டும் பணிக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘அம்பர்லாட்ரீ’ என்ற 31 மரங்கள் வேரோடு பிடுங்கி அருகில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடப்பட்டன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ‘ராயல்பாம்’ என்ற 51 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை மையத்தில் உள்ள தடுப்பில் நடப்பட்டன.

இந்த நிலையில் இங்கு ‘யு’ வடிவ மேம்பால அணுகு சாலை அமைக்க அந்த பகுதியில் நின்ற ‘காப்பர் பாட்’ என்ற 33 மரங்களை அகற்ற வேண்டி இருந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வுக்கு பிறகு 11 மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அதே இடத்தில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 11 மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த 11 மரங்களும் சோழிங்கநல்லூர் கருணாநிதி சாலை மைய தடுப்பில் நடும் பணிகள் நடக்கிறது. இந்த பாலம் கட்டுமான பணிக்காக மொத்தம் 93 மரங்கள் பிடுங்கி மாற்று இடங்களில் நடப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.