இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! (கட்டுரை)
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது.
அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது. தனது உரையின் தொடக்கத்தில், நான்கு விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவை நான்கும் மிகத் தெளிவாக, இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகவே, இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தின.
ஒருபுறம், வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகையில் மறுபுறம், போராட்டக்காரர்கள் மீது கட்டற்ற வன்முறை ஏவப்பட்டது.
இவை இரண்டும், ஒன்றுடனொன்று தொடர்பற்றவை போல்த் தோன்றலாம். ஆனால், உண்மையதுவல்ல; இலங்கையர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி, எமது எதிர்கால சந்ததிகளைப் படுகுழியில் தள்ளும் காரியத்துக்கான தொடக்கப் புள்ளியாக, இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இருக்கின்றன.
இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையின் தொடக்கத்தில், அவர் சுட்டிக்காட்டிய நான்கு விடயங்களில் முதலாவது, “நாட்டின் பொருளாதார நெருக்கடி, மிகத்தீவிரமாக உள்ளது. ஆனால், மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை” என்பதாகும். இங்கு கேட்கப்படும் கேள்வி யாதெனில், அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்களா?
இன்றும் அரச விழாக்கள், பெருந்தொகை பணச்செலவில் நடத்தப்படுகின்றன. ஊழல் குறையவில்லை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்கின்றன. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை, நேரடியாகவும் ஊடகங்களின் வழியாகவும் அன்றாடம் காண்கிறோம். இவை எவற்றையும் கண்டுகொள்ளாத ஜனாதிபதியும் அரசாங்கமும், மக்கள் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை உணரவில்லை என இப்போது சொல்கிறார்கள்.
இரண்டாவது: “அரசாங்கம், தேசிய மயமாக்கலை நடைமுறைப்படுத்திய காலத்திலிருந்து, நாட்டின் வரி வருவாயின் பெரும்பகுதி, அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுசெய்யவே செலவிடப்பட்டது. சமூகத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதி, இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துவதில் வீணடிக்கப்படுகிறது”.
இந்தக் கூற்று சரியானதல்ல. தேசிய மயமாக்கல், பல முக்கிய பலன்களையும் அதுசார் வருமானத்தையும் அரசாங்கத்துக்கு வழங்கிய காலமொன்று இருந்தது. இலங்கையின் பொருளாதார வரலாற்றை அறிந்தவர்கள், அதை அறிவர்.
1977இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாலும் அந்நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டமையாலுமே, அந்நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கத் தொடங்கின என்ற உண்மையை, ரணில் மறைத்துவிடுகிறார். அவரின் மேற்சொன்ன கூற்று, அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்ற, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதற்காக அமைந்திருக்கிறது.
மூன்றாவது: “அரசாங்கம் கொள்கைகளை உருவாக்க வேண்டுமேயன்றி, இலாபம் தரும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது”.
இக்கூற்று, மிகவெளிப்படையாக நவதாராளவாத திறந்த பொருளாதார அடிச்சுவட்டை அப்படியே பிரதிபலிக்கிறது. அரசு, அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். கொள்கைவகுப்புக்கு அப்பால், அரசு தலையிடக்கூடாது; அனைத்து அலுவல்களையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இலாபமோ நட்டமோ, அது அவர்களின் பாடு என்று விட்டுவிட வேண்டும். இதைத்தான் ரணில் முன்மொழிகிறார். இதன்மூலம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட்ட துறைகளை தனியாரிடம் ஒப்படைத்தல் வேண்டும் என்பதாகும்.
நான்காவது: “நாட்டை விட, தங்கள் சொந்த நலனுக்காகவும் மக்களைக் கவரும் சொல்லாடல்கள், அரசியல் மயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில், கடந்த கால அரசாங்கங்கள் ஈடுபட்டமையே, நமது பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்”.
இவ்வாறு கடந்தகால அரசாங்கங்களைக் குறைசொல்கின்ற ரணில், கடந்த அரை நூற்றாண்டில் பல்லாண்டு காலம், அரசாங்கங்களில் அங்கம் வகித்தவர் என்பதை மறந்துவிட்டார். இலங்கை மோசமான அரசியல்மயமாக்கலைச் சந்தித்த காலம் 1977 முதலான 17 ஆண்டுகள். இக்காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர் ரணில். இறுதியாக, இவர் பிரதமராகப் பதவி வகித்த, 2015 – 2019 வரையான காலத்தில், அரசாங்கத்தின் யோக்கியதை என்னவென்று நாமறிவோம்.
ஜனாதிபதியின் இந்த வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய பகுதி, “ஐக்கிய நாடுகள் சபை, முன்னணி சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைகளான எரிவாயு, மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை தட்டுப்பாடு இன்றி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன; பல்கலைக்கழகங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன” என்பதாகும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி பற்றிய, அரசாங்கத்தின் புரிதல் எத்தகையது என்பதை, இக்கூற்றுகள் தெளிவாக விளக்குகின்றன.
மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பது, பாடசாலைகள், பல்கலைக்கழகங்களைத் திறப்பது, எரிவாயு, மின்சாரம், எரிபொருளை வழங்குவது என்பதோடு, எமது பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவியலும் என்று அரசாங்கம் சொல்கிறது.
பொருட்களின் அபரிமிதமான விலையேற்றம், மருந்துத் தட்டுப்பாடு, பணவீக்கம், சிறுதொழில்கள் நசிவு, அன்றாட உழைப்பாளிகளின் வருமானமின்மை போன்றவை எவையும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொருட்டல்ல.
‘மக்களின் நலன்களைப் பேணுதல்’ என்ற பொறுப்பில், அரசாங்கம் எவ்வளவு அசண்டையீனமாக இருக்கிறது என்பதற்கு, இன்னொரு சான்று உள்ளது. வரவு செலவுத் திட்ட உரையில், இலங்கையில் 61,000 குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார். சிலவாரங்களுக்கு முன்னர், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பில் விரிவான அறிக்கையை ‘உலக உணவு நிகழ்ச்சித் திட்டம்’ வெளியிட்டது. அதில், 63 இலட்சம் இலங்கையர்கள், மோசமான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம், 63 இலட்சத்தை 61,000 எனக் குறைவாக எண்ணிக்கையை கருதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில், சமூகநல வெட்டுகளை அறிமுகப்படுத்துவது, இந்த வரவு செலவுத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்!
இன்று, இலங்கையில் பொருட்களின் விலைகள், பன்மடங்கு அதிகரித்துள்ளன, பணவீக்கம் மோசமாக உள்ளது, வேலைவாய்ப்புகளும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இந்நிலையில், அரசாங்கம் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடு, பின்வருவனவற்றை முன்மொழிகிறது:
4,500 ரூபாயாக வழங்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவு 3,100 ரூபாயாக குறைப்பு.
5,000 ரூபாயாக இருந்த மூத்தோருக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயாக குறைப்பு.
சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு மாதாந்தம் 5,000 ரூபாயிலிருந்து 2,500ஆகக் குறைப்பு.
இந்த வரவு செலவுத் திட்டம், சாதாரண மக்களுக்கானதல்ல; அன்றாடம் உழைக்கும் மக்களுக்கானதல்ல. பல புதிய வரிவிதிப்புகளை இந்த வரவு செலவுத் திட்டம் முன்மொழிகிறது. அதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வரிவிதிப்புக்குள் உள்வாங்கல்; பெறுமதிசேர் வரியை அதிகரித்தல் போன்றன குறிப்பிடத்தக்கவை.
ஆனால், செல்வந்தர்களுக்கான வரி பற்றி எதுவுமில்லை. அரசாங்கம், சாதாரண மக்களிடம் வரிச்சுமையை ஏற்றுவதையே செய்கிறது. அதேவேளை, ‘வர்த்தக விரிவாக்கம்’ என்ற பெயரில், செல்வந்தர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படப் போகின்றன.
இந்த வரவு செலவுத் திட்டம், இன்னொரு முக்கியமான விடயத்தை முன்மொழிந்துள்ளது. அது, கல்வியின் தனியார் மயமாக்கலை நோக்கிய முதற்படி. “வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் கிளைகளை இலங்கையில் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். உயர்கல்வியில் தனியார் முதலீட்டுக்கான இடத்தை உருவாக்குவது; அரசாங்க வளங்களை விடுவித்தல். இதன்மூலம் அரசநிதி மிச்சப்படுத்தப்படும்” என்றார் ஜனாதிபதி.
ஆகமொத்தத்தில், மெதுமெதுவாக அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைத்து? அரச பல்கலைக்கழகங்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குத் தாரைவார்க்கும் கைங்கரியத்தின் முதற்படியே இது. இலங்கையின் இலவசக் கல்வி மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
இன்று அரசு ஆர்ப்பாட்டங்களை அடக்குகிறது; எதிர்க்குரல்களை நசுக்குகிறது. இதை அரசாங்கம் செய்வது, சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சிநிரலை எந்தவோர் எதிர்ப்பும் இன்றி நடைமுறைப்படுத்தவே ஆகும்.
எமக்கானதை, எமது குழந்தைகளுக்கானதை நாம் இழந்துவிட்டு, அதிகாரத்துக்கு சேவகம் செய்யும் தலைமுறையை உருவாக்க, நாம் அனுமதிக்கப் போகின்றோமா? அதிகாரத்தைக் கேள்வி கேட்கவும் எதிர்க்கவும் கூடிய ஒரு சமூகத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலப் போகின்றோமா?