மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறது பாஜக..!!
தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 31 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் இந்த வழக்கில் 15 போ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மணீஷ் சிசோடியா பெயர் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அவர்கள் அளிக்க உள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தம்மீது பொய் வழக்கு போடுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் தம்மை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.