யுனிசெப்பின் அறிக்கையை நிராகரிக்கும் சுகாதார அமைச்சு!!
இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து யுனிசெப் வெளியிட்ட அறிக்கையை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
இதற்காக அவர்கள் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு ஆண்டுகளில் (1995 முதல் 2019 வரை) நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் தரவுகளை அவர்கள் ஒப்பிட்டு, இலங்கையில் 2016ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாக வைத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 13.2 சதவீதமாக குறைந்துள்ளதுடன், தற்போது அது 12.1 ஆக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகளைப் போன்று இந்நாட்டில் சிறுவர்கள் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் அபாயம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், மராமஸ், குவோஷியோகோர் போன்ற கடுமையான போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இல்லை எனவும் சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் யுனிசெப் தலைவருக்கு விளக்கமளித்து அறிவிக்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.