அரசுக்கு வழிகாட்டும் வகையில் தேசிய சபை அமைக்கப்படும்!!
அரசாங்கத்திற்கு வழிகாட்டும் வகையில் சகல கட்சித் தலைவர்களை உள்ளடக்கியதாகவே தேசிய சபை அமைக்கப்படும், வெகு விரைவில் தேசிய சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய சபை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடு தொடர்பான விவாதத்திற்கு முன்னர், தேசிய சபைக்கு இதன் கொள்கை வரைபை முன்வைக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எப்புடன் செய்துகொள்ளும் உடன்படிக்கையின் காரணிகளை வெளிப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவற்றை வெளிப்படுத்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது. ஆனால் இன்னமும் அவ்வாறான உடன்படிக்கை ஒன்றினை நாம் செய்துகொள்ளவில்லை, இணக்கப்பாட்டுக்கு மட்டுமே வந்துள்ளோம். ஐ.எம்.எப்பின் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே உடன்படிக்கை செய்துகொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.