இராஜாங்க அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கீடோ, செயலாளர்களோ கிடையாது!!
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு, பொதுமக்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவும், அதிகபட்ச வினைத்திறனுடனும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, அரச செலவினங்களை நிர்வகிப்பதற்கென விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இன்று (09) பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியால் நேற்று (8) நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும்போது புதிய விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி,
இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படமாட்டாது. இராஜாங்க அமைச்சுக்களுக்கு செயலாளர் நியமிக்கப்படமாட்டார்கள். துறைசார் இராஜாங்க அமைச்சர்கள், பணிகளை இலகுபடுத்த, தனது அமைச்சுக்களில் உள்ள மேலதிக செயலாளர்களில் சிரேஸ்ட அதிகாரியின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமது அமைச்சில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள பணியாளர்களைப் பயன்படுத்தியே தமது பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும். பதவிகளில் புதியவர்களை அமர்த்துவதற்கான கோரிக்கைகளை நிர்வாக சேவைகள் திணைக்களத்திடம் முன்வைக்கக் கூடாது.
அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது பணி செய்துவரும் அலுவலக வளாகத்துக்குள்ளேயே இராஜாங்க அமைச்சர்களின் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இராஜாங்க அமைச்சர்களுடைய பணியாளர் குழாமில் பிரத்தியேகச் செயலாளருக்கு மட்டுமே உத்தியோகபூர்வ வாகன வசதி வழங்கப்படும். பிரத்தியேகச் செயலாளரின் உத்தியோகபூர்வ சாரதியின் மேலதிக நேரம் மற்றும் இதரக் கொடுப்பனவுகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையின்படி கையாளப்பட வேண்டும்.
பணியாளர் குழாமின் ஏனைய உறுப்பினர்களுக்காக 02 வாகனங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக அமைச்சுக்கு சொந்தமான ஏனைய வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது.
நிர்வாக உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உதவியாளர், சாரதி ஆகியோர், நிரந்தர அரச ஊழியர்களாகவே இருத்தல் வேண்டும். அந்த சாரதிகள் மாதாந்தம் மேலதிக நேர கொடுப்பனவாக அதிகபட்சம் 150 மணிநேரத்திற்கான கொடுப்பனவை மட்டுமே பெறமுடியும்.
பிரத்தியேகச் செயலாளர், ஒருங்கிணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு குறைந்தபட்ச தொலைத் தொடர்பு கொடுப்பனவு வழங்க முடியும். இதில் டேட்டா பயன்பாடு, சர்வதேச தொலைபேசிக் கட்டணம், மாதாந்த நிலையான கட்டணம், வரிகள் உட்பட ஏனைய கட்டணங்களும் இவற்றில் உள்ளடங்கும்.
உதவி ஊழியர்களுக்கு அரச செலவில் தொலைபேசிக் கட்டணங்கள் வழங்கப்பட மாட்டாது.ஆகிய விதிமுறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, CA/01/17/01 மற்றும் அரச செலவு நிர்வாகம் என்ற தலைப்பில் மே 14, 2010 அன்று வெளியிடப்பட்ட கடிதங்கள் மற்றும் அவ்வப்போது திருத்தங்களுடன் வெளிவந்த கடிதங்களில் உள்ள விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இந்த பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.