;
Athirady Tamil News

அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் நாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன்!!

0

அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை நாம் ஆரம்பித்திருந்தோம். இது வடக்கு,கிழக்கு,கொழும்பு,மலையகம் என நாடு முழுவதும் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஆனாலும் கூட நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கையெழுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டி ஏற்பட்டது.

வீதியோரங்களில் நாங்கள் இருந்து கையெழுத்துக்களை சேகரித்த போது அங்கு நிற்க முடியாத அளவுக்கு வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததால் நாம் கையெழுத்துப்
போராட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை.

நாம் மீண்டும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கத்தால் ஐநா மனித உரிமை பேரவைக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் நாடாளுமன்றுக்கும் வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அந்த வாக்குறுதிக்கு மாறாக அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால் நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுப்போம். விசேடமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே நாம் இதனை மேற்கொள்ளும் போது மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயல்படுவர். உறுதியாக நாம் அம்பாந்தோட்டை மாவட்டத்தை சென்றடைவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.