நாட்டை மீட்டெடுக்க நியூசிலாந்து ஆதரவு!!
பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்துக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்குவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
இப் பேச்சுவார்த்தை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகத்தில் நடந்தது.
இலங்கையின் நட்புறவு நாடாக இந்த நாட்டு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு எப்பொழுதும் நியூசிலாந்து தயாராக இருப்பதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியூசிலாந்து உயர் ஸ்தானிகரிடம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்று.கேட்டுக் கொண்டார்.
அதற்கு தனது உடன்பாட்டை தெரிவித்த உயர் ஸ்தானிகர், ஏற்கனவே அது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் நிலை பற்றி உயர் ஸ்தானிகருக்கு இங்கு தெளிவுபடுத்திய ஆளும் அமைச்சர் பிரசன்ன, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதோடு நாட்டுக்குள் அரசியல் ஸ்தாவரத் தன்மை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதற்காக ஜனாதிபதியின் பிரதான பணியாக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை வைத்திருக்கின்ற இலங்கை பொதுஜன பெரமுன தம்முடைய பூரண ஆதரவை ஜனாதிபதிக்கு கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் தமது கட்சி புரிந்துணர்வோடு செயற்படுவதாகவும் சர்வ கட்சி ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்திருப்பதாகவும் சகல கட்சிகளையும் இணைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் உயர் ஸ்தானிகருக்கு விளக்கினார்.