;
Athirady Tamil News

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டால் மீன் வளங்கள் இல்லாமல் போகும்!!

0

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டால் மீன் வளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போகும் என்பதுடன் களப்பு கடலை நம்பி தொழில் செய்பவர்கள் பெருமளவில் பாதிப்படைவார்கள் என தெரிவித்த ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன், கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில் செய்கின்றவர்களே அதிகம்.இவர்களது வாழ்வாதாரத்தை யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

கடலட்டை வளர்ப்பு என்பது அந்நியச் செலாவணியை ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தீவகப் பகுதிகளில் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கான இடங்கள் சீன நாட்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மீன் வளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போகும் என்பதுடன் களப்பு கடலை நம்பி தொழில் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். இதனை கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதிக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடாமல் அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் இடத்தை அடையாளப்படுத்தி விட்டு செல்கின்றார்கள். நேரடியாக அரசாங்கத்திடம் அனுமதி எடுத்து விட்டு வருகின்றார்கள். இது தொடர்பாக மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே எமக்கு தகவல் தெரிந்தவுடன் இதனை ஊடகங்கள் ஊடாக தெரிவித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் – என்றார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் மடுத்தின் பெனடிக், கடலட்டை வளர்ப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் கடற்றொழிலாளர்களை அது பாதிக்கும் என்றும் கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்ப்படுகின்றது என்றார்.

கடல் தொடுவாய்களை மறைத்து கடலட்டை பண்ணைகள் கட்டப்படுவதனால் மீன்வரத்து குறைந்து கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

செயற்கை தொழில்களால் இயற்கை தொழில்கள் தீவகத்தில் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.சீனாவுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதை முற்றும் முழுதாக நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் வளம் இருக்கின்றது. இன்னொரு நாட்டிடம் அதனை கொடுத்து வளத்தை பெற வேண்டிய அவசியமில்லை.வெளிநாட்டுக்கு வளங்களை கொடுத்து நாங்கள் இன்னொரு நாட்டிடம் வளங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை தீவக மக்களிடமும் எமது பகுதி புலம்பெயர்ந்த மக்களிடம் இதற்கான வளங்கள் இருக்கின்றன.

கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்ட போதும் அதையும் மீறி கடலட்டை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.