மக்களின் இறையாண்மைக்குப் புறம்பான தீர்மானத்தை ஏற்கோம் – அலி சப்ரி!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தையும் மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும், எனவே அத்தீர்மானத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அதனுடன் தொடர்புடையதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் இலங்கை முற்றாக நிராகரிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்தார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலைபேறானதாகவும் அமையவேண்டுமானால், அவை சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியுடனும் அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாகவும் அடிப்படை சட்டக்கட்டமைப்பு ஒன்றின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்றும் எனவே அரசியலமைப்பிற்கு அமைவாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்றையதினம் ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் அவ்வறிக்கையின் சாரம்சம் பேரவையில் வாசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலங்கையின் சார்பில் அவ்வறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
எமது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் நாம் கொண்டிருக்கும் நிலையான கடப்பாட்டையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்ந்து ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கான எமது தயார்நிலையையும் நான் மீளுறுதிப்படுத்துகின்றேன்.
அதேவேளை பல்வேறு உள்ளக மற்றும் வெளியகக் காரணிகளால் தோற்றம்பெற்றுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடி எமக்குப் பலதரப்பட்ட படிப்பினைகளைக் கற்றுத்தந்துள்ளது.
எமது மக்கள் முகங்கொடுத்திருக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவலையடைந்திருப்பதுடன் அத்தியாவசியப்பொருட்களின் நிரம்பலை (கிடைப்பனவை) உறுதிசெய்வதன் ஊடாக மக்களின் நலனை வலுப்படுத்துவதற்கு அவசியமான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்தோடு தற்போதைய நெருக்கடியின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கங்களிலிருந்து மிகவும் பின்தங்கிய சமூகத்தினரைப் பாதுகாப்பதை இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்கள் மற்றும் இருதரப்புப்பங்காளிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
தற்போதைய தீவிர நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுயாதீன உள்ளகக்கட்டமைப்புக்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முன்னேற்றத்தை அடைந்துகொள்வதில் இலங்கை உறுதியாக இருக்கின்றது.
அதேவேளை இலங்கையானது பேரவையின் மேலும் சில உறுப்புநாடுகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
அத்தீர்மானம், குறிப்பாக அதன் 6 ஆவது பந்தியில் உள்ள விடயங்கள் இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தையும் மீறும் வகையில் அமைந்திருப்பதாக நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றோம்.
எனவே அத்தீர்மானத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அதனுடன் தொடர்புடையதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
மேலும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் ‘பொருளாதாரக்குற்றங்கள்’ தொடர்பில் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தெளிவற்ற அச்சொற்பதத்திற்கு அப்பால், அத்தகைய விடயங்களை முன்வைப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையைக்குப் புறம்பானதாக அமைந்துள்ளது.
அடுத்ததாக அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் ஜனநாயக ஆட்சிநிர்வாகத்தையும் முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை மீதான கண்காணிப்பையும் வலுப்படுத்துவதுடன் ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடியவாறான பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலைபேறானதாகவும் அமையவேண்டுமானால், அவை சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியுடனும் அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாகவும் அடிப்படை சட்டக்கட்டமைப்பு ஒன்றின் ஊடாகவும் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
எனவே நாம் அரசியலமைப்பிற்கு அமைவாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”