போலீசாரிடம் குறை கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: 800 பேருக்கு உடனடி பலன்..!!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், நிர்வாகப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் உள்ளிட்ட ஏராளமான உயர் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
மகிழ மரக்கன்று
இதனையடுத்து டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் மகிழ மரக்கன்று ஒன்றை நட்டார். அதன் அருகில் அவரது தந்தை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் நட்ட மகிழமரக்கன்று, தற்போது பெரிய மரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்பது, குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் ஏற்கனவே மரக்கன்றுகளை நட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைகளை கேட்டார்
பின்னர் டி.ஜி.பி. அலுவலகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் குறைகளை கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். 4 பெண் போலீசார் உள்ளிட்ட 10 போலீசாரிடம் மனுக்களை பெற்றார். உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை போலீசாரிடம் மனுக்கள் பெறப்பட்டு, அவர்களில் எத்தனை பேரின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய விவரங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த டி.ஜி.பி. ‘பணி இடமாறுதல், ஊதிய முரண்பாடு மற்றும் தண்டனையை குறைத்தல் போன்றவை தொடர்பாக பெறப்பட்ட மனுக்களில், தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது’ என்று தெரிவித்தார்.
800 பேருக்கு உடனடி பலன்
அப்போது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் 800 பேர் உடனடி பலன் அடைந்தனர். மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தின் கட்டிட வரலாறு குறித்தும் விவரங்கள் கேட்டார். தற்போதுள்ள டி.ஜி.பி. அலுவலக கட்டிடத்தை இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மிகவும் தொன்மையான கட்டிடம் என்பதால், எதிர்ப்பு கியம்பியது.
அதனால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. பின்னர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, தொன்மையான டி.ஜி.பி. அலுவலக கட்டிடம் புதுப்பொலிவோடு புதுப்பித்து கட்டப்பட்டது பற்றியும், அதன் அருகே புதிதாக மேலும் 2 கட்டிடங்கள் கட்டப்பட்டது பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
அரைமணி நேரம்
சுமார் அரை மணி நேரம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்த அனைத்து உயர் அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார். அமைச்சு பணியாளர்கள் சார்பிலும் முதல்வருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்வரின் வருகையையொட்டி டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.