இலங்கை ரீதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலிடம்.!! (PHOTOS)
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் “வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு” சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சமன் ஹன்டரகமவும், சிறப்பு விருந்தினர்களாக சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பி.களுஆராச்சி மற்றும் பிரதி முகாமையாளர் எஸ்.டபுள்யு.லக்ஸ்மன் ஆகியோரும், விருந்தினர்களாக மேம்பாட்டு முகாமையாளர் டி.எஸ்.லக்மல், சிரேஷ்ட இணைப்பாளர் ரஞ்சித் தேஸநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் முதலாம் இடத்திற்கான விருதினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் பெற்றுக் கொண்டார்.
அத்தோடு 2019 ஆம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்திற்கான விருதினை யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பெற்றுக்கொண்டார்.
மேலும், சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் 2020 ஆம் ஆண்டில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் திரு.சண்முகராஜா சிவஸ்ரீ முதலாம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரநாதன் தயாபரன் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி. யசோதா உதயகுமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
2020ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் குமாரசுவாமி பிரபாகரமூர்த்தி இரண்டாம் இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
2019 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இது அவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தில் கடமையாற்றிய காலப்பகுதிக்குரிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் உடுவில் பிரதேச செயலாளரும் தற்போதைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருமான சிவராஜசிங்கம் ஜெயகாந்தன் 2019, 2020,2021 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்துக்கான விருதினையும், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும், சமூக பாதுகாப்பு சபையினால் 2021 ஆண்டில் தேசிய மட்ட இலக்கினை பூர்த்திசெய்தமைக்காக சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இராசதுரை கேசவேல் அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு, இவ் விருது வழங்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், சமூக பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.