பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று திருப்பதியில் தங்க தேரோட்டம்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் கருட சேவையை கண்டு களித்தனர்.
பக்தர்களின் வசதிக்காக நேற்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2,345 ட்ரிப் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 1,01,880 பக்தர்கள் பயணம் செய்தனர். இதேபோல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு 2,386 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 72,637 பக்தர்கள் பயணித்தனர். கருட சேவையை காண்பதற்காக பல மணி நேரமாக 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளாக இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. தங்கதேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. திருப்பதியில் நேற்று 81,318 பேர் தரிசனம் செய்தனர். 38,464 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.