கேரளாவில் சுற்றுலா பள்ளி பேருந்து விபத்து: பேருந்து உரிமையாளர், மானேஜர்-ஓட்டுனர் அதிரடி கைது..!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். சுற்றுலா பஸ் பாலக்காட்டை அடுத்த வடக்கஞ்சேரி பகுதியில் வந்தபோது முன்னே சென்ற கேரள அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா பேருந்தில் இருந்த மாணவர்கள் மற்றும் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் என 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வடக்கஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுற்றுலா பேருந்து அதிவேகத்தில் வந்ததாகவும், அதன்காரணமாகவே விபத்து நடந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையே விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய சுற்றுலா பேருந்து ஓட்டுனர், மருத்துவமனையில் இருந்து தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர்களை ஏற்றி சென்ற சுற்றுலா பேருந்து உரிமையாளர் மற்றும் மானேஜர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதுபோல தலைமறைவான சுற்றுலா பேருந்து ஓட்டுனர் ஜோமோனும் சிக்கினார். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முன்னால் சென்ற அரசு பேருந்து திடீரென நின்றதால், சுற்றுலா பேருந்து அதன் மீது மோதியதாக சுற்றுலா பேருந்து ஓட்டுனர் ஜோமோன் கூறினார். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர் கூறும்போது, சுற்றுலா பஸ் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் எனக்கூறினார். இருவரும் மாறி, மாறி புகார் கூறியதால், இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் மற்றும் வாகனத்தில் உள்ள வேககட்டுப்பாட்டு கருவிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜ் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துறை ஆணையர் அறிக்கை தயாரித்து அமைச்சரிடம் வழங்கினார். அதில் சுற்றுலா பஸ்சின் தவறால் விபத்து ஏற்பட்டதாகவும், முன்னால் சென்ற காரை இடதுபுறமாக முந்தி செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.