தனியார்மயத்தால் எந்த மாநிலத்தில் மின் கட்டணம் குறைந்தது..!!
மின்துறை தனியார் மயமானதால் எந்த மாநிலத்தில் மின்கட்டணம் குறைந்தது? என்று வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார். புதுவை எம்.பி. வைத்திலிங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கல்வியில் குழப்பம்
புதுவைக்கு வந்த மத்திய மனிதவள மந்திரி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டுவர உள்ளதாக கூறியுள்ளார். அந்த செய்தி மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக உள்ளது. இந்த விஷயத்தில் புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன? இதற்கு முதல்-அமைச்சரும், கல்வி அமைச்சரும் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழுக்கான முக்கியத்துவம் குறையும். மாநிலத்தில் எல்லா திட்டங்களிலும் குழப்பம் விளைவித்தவர்கள் இப்போது மாணவர்களுக்கு வழிகாட்டியான கல்வியிலும் குழப்பத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டனர்.
தனியார் மயம்
தற்போதைய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தமிழை புறக்கணிக்கும் நிலை உருவாகிவிட்டது. அதனை தடுக்க முதல்-அமைச்சர் என்ன செய்யப்போகிறார்?
புதுவையில் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து கடந்த வாரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் டெண்டர் விடப்பட்டது இன்னும் நடைமுறையில்தான் உள்ளது.
மின்கட்டணம் எங்கு குறைந்தது?
மின்துறையில் 100 சதவீதம் தனியார் மயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. டெண்டர் தொடர்பான விளக்கங்களை ரூ.5.90 லட்சம் கட்டித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. டெண்டரில் மின்துறைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான இடத்தை ரூ.1 வாடகைக்கு விட்டுள்ளனர். இதேபோல் ரூ.200 கோடி மதிப்புள்ள துணை மின்நிலையங்களையும் ரூ.2 கோடி வரை மட்டுமே விலை நிர்ணயித்துள்ளனர். இதனை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எதிர்க்கிறோம். தனியார் மயம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் மின்கட்டணம் குறையும் என்றும் கவர்னர் கூறுகிறார். தனியார் மயத்தால் எந்த மாநிலத்தில் மின்சார கட்டணம் குறைந்தது என்பதை அவர் கூறுவாரா? ஆட்சியாளர்களின் நண்பர்களுக்கு ஏற்றாற்போல் டெண்டர் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க எவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றதோ, அதேபோல் மின்துறை தனியார் மயத்திலும் முறைகேடுகள் நடந்து வருகிறது.
மூடுவிழா
முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மூடுவிழாக்கள் நடக்கிறது. அரசு பணிமனை, பெட்ரோல் பங்க், ரோடியர்மில், கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சுதேசி, பாரதி மில்கள் மூடும் நிலையை நோக்கி செல்கிறது. நாங்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கவர்னர் கிரண்பெடியோடு சண்டைபோட்டாலும் தனியார் மயத்தை தடுத்து நிறுத்தினோம். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போதைய கவர்னரோடு சேர்ந்து வியாபாரம் செய்கிறார். மின்துறை தனியார் மயத்தை தடுக்க மக்களுடன் இணைந்து போராடுவது, கோர்ட்டுக்கு செல்வது என்பன போன்ற வழிகள் உள்ளன. இதற்காக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடும். இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.